ரசாயன விநாயகர் சிலைகளை விற்பனை செய்யக்கூடாது - கலெக்டர் எச்சரிக்கை
ரசாயன விநாயகர் சிலைகளை விற்பனை செய்யக்கூடாது என்று கலெக்டர் கந்தசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
திருவண்ணாமலை,
விநாயகர் சதுர்த்தி விழாவினை கொண்டாடும் போது களிமண்ணால் செய்யப்பட்டது, சுடப்படாதது மற்றும் எந்தவித ரசாயன கலவையற்றதுமான கிழங்கு மாவு மற்றும் மரவள்ளிக்கிழங்கில் இருந்து தயாரிக்கும் ஜவ்வரிசி தொழிற்சாலை கழிவுகள் போன்ற சுற்றுச்சூழலை பாதிக்காத மூலப்பொருட்களால் மட்டுமே செய்யப்பட்டதுமான விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் பாதுகாப்பான முறையில் கரைக்க அனுமதிக்கப்படும்.
நீரில் கரையும் தன்மையுடைய மற்றும் தீங்கு விளைவிக்காத வர்ணங்களை உடைய விநாயகர் சிலைகளை உபயோகிக்க வேண்டும். பிளாஸ்டர் ஆப் பாரீஸ், சுடப்பட்ட களிமண்ணால் செய்யப்பட்ட, ரசாயன வர்ணம் பூசப்பட்ட விநாயகர் சிலைகளை உற்பத்தி செய்யவோ, விற்கவோ அல்லது வாங்கி நிர்மாணிக்கவோ கூடாது. இவ்வாறு செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் கரைக்க கண்டிப்பாக அனுமதிக்கப்படமாட்டாது.
பிளாஸ்டர் ஆப் பாரீஸ், சுடப்பட்ட களிமண்ணால் செய்யப்பட்ட மற்றும் ரசாயன வர்ணம் பூசப்பட்ட விநாயகர் சிலைகளை உற்பத்தி செய்யும் மற்றும் விற்பனை செய்யும் இடங்கள் தொடர்பாக மாவட்ட நிர்வாகத்திற்கோ, மாசு கட்டுப்பாட்டு வாரிய உதவி பொறியாளரை தொலைபேசி எண் 8870470687 மற்றும் அலுவலக தொலைபேசி 04175-233118 என்ற எண் மூலமாகவோ தொடர்பு கொண்டு தெரிவித்தால் தக்க நடவடிக்கை மேற்கொண்டு அத்தகைய சிலைகளை கைப்பற்றி அப்புறப்படுத்தப்படும்.
பொது மக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு அளித்து நீர்நிலைகளை பாதுகாக்கப்படும் வகையில் விநாயகர் சதுர்த்தி விழாவினை கொண்டாட வேண்டும்.
இந்த தகவலை கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி தெரிவித்து உள்ளார்.
Related Tags :
Next Story