கோவில்பட்டியில் ரூ.65 லட்சத்தில் அறிவியல் பூங்கா: அமைச்சர் கடம்பூர் ராஜூ திறந்து வைத்தார்


கோவில்பட்டியில் ரூ.65 லட்சத்தில் அறிவியல் பூங்கா: அமைச்சர் கடம்பூர் ராஜூ திறந்து வைத்தார்
x
தினத்தந்தி 1 Sept 2019 4:00 AM IST (Updated: 1 Sept 2019 2:08 AM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டியில் ரூ.65 லட்சத்தில் அமைக்கப்பட்ட அறிவியல் பூங்காவை அமைச்சர் கடம்பூர் ராஜூ திறந்து வைத்தார்.

கோவில்பட்டி,

கோவில்பட்டி 28-வது வார்டு வெங்கடேஷ் நகரில், மாவட்ட கனிமவள அறக்கட்டளை நிதி திட்டம் ரூ.50 லட்சம் மற்றும் பொது நிதி திட்டம் ரூ.15 லட்சம் செலவில் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள், பொதுமக்கள் பயன்பெறும் வகையில் அறிவியல் பூங்கா அமைக்கப்பட்டு உள்ளது. இதன் திறப்பு விழா நேற்று நடந்தது. மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி தலைமை தாங்கினார்.

செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு அறிவியல் பூங்காவை திறந்து வைத்தார். பின்னர் அவர், அங்கு அமைக்கப்பட்ட அறிவியல் சார்ந்த பல்வேறு விளையாட்டு உபகரணங்களை இயக்கி பார்வையிட்டார்.

பின்னர் அருகில் உள்ள தனியார் மண்டபத்தில் நடந்த விழாவில் அமைச்சர் கடம்பூர் ராஜூ பேசும்போது கூறியதாவது:-

கோவில்பட்டியில் அரசு கல்லூரி மற்றும் சர்வதேச தரம் வாய்ந்த செயற்கை புல்வெளி ஆக்கி மைதானம் அமைக்கப்பட்டு உள்ளது. அங்கு வீரர்கள் தங்கும் வகையில் ரூ.1¼ கோடி செலவில் விளையாட்டு விடுதி அமைக்கப்பட்டு உள்ளது. லாயல் மில் காலனியில் 2 மாடிகளுடன் கூடிய அரசு உயர்நிலைப்பள்ளி அமைக்கப்பட்டு உள்ளது. கோவில்பட்டியில் ரூ.18 கோடி செலவில் அரசு செவிலியர் கல்லூரி அமைக்கும் பணி விரைவில் தொடங்கப்பட உள்ளது.

வெங்கடேஷ் நகரில் புதிதாக திறக்கப்பட்ட அறிவியல் பூங்காவில் மாணவர்களின் அறிவுத்திறனை மேம்படுத்தும் வகையில், அறிவியல் சார்ந்த பல்வேறு விளையாட்டு உபகரணங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இங்கு பொதுமக்கள் நடைப்பயிற்சி செல்லும் வகையில் நடைபாதையும் அமைக்கப்பட்டு உள்ளது. இதனை மாணவர்கள், பொதுமக்கள் நன்கு பயன்படுத்தி கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் கோவில்பட்டி அருகே கெச்சிலாபுரத்தில் 27 திருநங்கைகளுக்கு முதல்-அமைச்சரின் பசுமை வீடுகள் வழங்கும் திட்டத்தில் புதிய வீடுகள் கட்டும் பணியை அமைச்சர் கடம்பூர் ராஜூ தொடங்கி வைத்தார். பின்னர் அவர், திருநங்கைகளுக்கு பசுமை வீடுகள் வழங்குவதற்கான ஆணையையும் வழங்கினார்.

விழாவில் கோவில்பட்டி உதவி கலெக்டர் விஜயா, சின்னப்பன் எம்.எல்.ஏ., ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் தனபதி, தாசில்தார் மணிகண்டன், நகரசபை ஆணையாளர் (பொறுப்பு) என்ஜினீயர் கோவிந்தராஜ், மத்திய கூட்டுறவு வங்கி துணை தலைவர் கணேஷ் பாண்டியன், மக்கள் தொடர்பு அலுவலர் சீனிவாசன், அ.தி.மு.க. நகர செயலாளர் விஜய பாண்டியன், ஒன்றிய செயலாளர் அய்யாத்துரை பாண்டியன், நிலவள வங்கி தலைவர் ரமேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story