சிறப்பு மக்கள் குறைதீர்வு திட்ட முகாமில் 2,127 அங்கன்வாடி பணியாளர்களுக்கு செல்போன்கள் - அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் வழங்கினார்


சிறப்பு மக்கள் குறைதீர்வு திட்ட முகாமில் 2,127 அங்கன்வாடி பணியாளர்களுக்கு செல்போன்கள் - அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் வழங்கினார்
x
தினத்தந்தி 1 Sept 2019 3:15 AM IST (Updated: 1 Sept 2019 2:11 AM IST)
t-max-icont-min-icon

முதல் - அமைச்சரின் சிறப்பு மக்கள் குறைதீர்வு திட்ட முகாமில் 2,127 அங்கன்வாடி மையப்பணியாளர்களுக்கு செல்போன்களை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் வழங்கினார்.

திருவண்ணாமலை, 

திருவண்ணாமலை நகராட்சிக்கு உட்பட்ட காந்திநகர் பகுதியில் உள்ள மைதானத்தில் முதல் - அமைச்சரின் சிறப்பு மக்கள் குறைதீர்வு திட்ட முகாம் நேற்று நடந்தது. முகாமுக்கு கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி தலைமை தாங்கினார். திருவண்ணாமலை மாவட்ட ஆவின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி முன்னிலை வகித்தார். ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்துறையின் மாவட்ட திட்ட அலுவலர் கந்தன் வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளராக அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் கலந்துகொண்டு பொதுமக்களிடம் இருந்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை பெற்றார். மேலும் 2,127 அங்கன்வாடி மையப்பணியாளர்களுக்கு ‘போஷன் அபியான்’ திட்டத்தின் கீழ் ரூ.2 கோடியே 12 லட்சத்து 70 ஆயிரம் மதிப்பிலான செல்போன்களை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் வழங்கினார்.

இதில் தாசில்தார் அமல் உள்பட வருவாய்த்துறையினர் மற்றும் நகராட்சி பணியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் கலந்துகொண்டனர்.

அங்கன்வாடி மையப்பணியாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள செல்போன் பயன்பாடு குறித்து மாவட்ட திட்ட அலுவலர் கந்தன் கூறுகையில், திருவண்ணாமலை மாவட்டத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டத்தின் கீழ் 2,127 அங்கன்வாடி மையங்கள் செயல்பட்டு வருகிறது.

அங்கன்வாடி மையத்தின் செயல்பாடுகளையும், குழந்தைகளுக்கு இணை உணவு வழங்கப்படும் தகவல், குழந்தைகளுக்கு எடை எடுத்தல், கர்ப்பிணிகளுக்கு சத்துமாவு வழங்கப்படுவது குறித்தும், வளரிளம் பெண்களுக்கு சத்தான உணவு பொருட்கள் வழங்குவது, வீடுகள் பார்வையிடுதல், சமூகம் சார்ந்த நிகழ்வுகள் போன்ற பல்வேறு தகவல்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்வதற்காக அங்கன்வாடி மைய பணியாளர்களுக்கு செல்போன்கள் வழங்கப்பட்டு உள்ளது’ என்றார். 

Next Story