ஊத்துக்கோட்டையில், விவசாயியிடம் ரூ.50 ஆயிரம் திருடியவர் பிடிபட்டார்


ஊத்துக்கோட்டையில், விவசாயியிடம் ரூ.50 ஆயிரம் திருடியவர் பிடிபட்டார்
x
தினத்தந்தி 31 Aug 2019 10:15 PM GMT (Updated: 31 Aug 2019 9:06 PM GMT)

ஊத்துக்கோட்டையில் உள்ள பாரத ஸ்டேட் வங்கி கிளையில் ரூ.50 ஆயிரம் எடுத்தார். பின்னர் பணப்பையை மோட்டார் சைக்கிள் பெட்டியில் வைத்து வீட்டுக்கு புறப்பட்டார்.

ஊத்துக்கோட்டை,

ஊத்துக்கோட்டை அருகே உள்ள புதுச்சேரி கிராமத்தை சேர்ந்தவர் மூர்த்திநாயுடு (60) விவசாயி. இவர் நேற்று ஊத்துக்கோட்டையில் உள்ள பாரத ஸ்டேட் வங்கி கிளையில் ரூ.50 ஆயிரம் எடுத்தார். பின்னர் பணப்பையை மோட்டார் சைக்கிள் பெட்டியில் வைத்து வீட்டுக்கு புறப்பட்டார். ஊத்துக்கோட்டையில் உள்ள நான்கு வழி சாலை சந்திப்பில் சென்று கொண்டிருந்தபோது திடீர் என்று போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அப்போது விவசாயி மூர்த்திநாயுடுவை பின்தொடர்ந்து வந்த 3 மர்ம நபர்கள் திருட்டுச்சாவியை கொண்டு பெட்டியை திறந்து ரூ.50 ஆயிரத்தை திருடி கொண்டு தப்பி ஓடினர்.

அப்போது மூர்த்திநாயுடு கூச்சலிடவே அக்கம் பக்கத்தில் இருந்த பொதுமக்கள் அவர்களை துரத்தினர்.

மேற்கு காவாங்கரை பகுதியில் 30 வயது மதிக்கத்தக்க வாலிபரை பொதுமக்கள் மடக்கி பிடித்தனர். 2 பேர் தப்பி ஓடி விட்டனர். பிடிப்பட்ட நபரிடம் இருந்து ரூ.50 ஆயிரத்தை மீட்டனர். பின்னர் பொதுமக்கள் அந்த வாலிபருக்கு தர்மஅடி கொடுத்து போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த வாலிபரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பிடிபட்ட வாலிபர் ஆந்திர மாநிலம் சித்தூர் அருகே உள்ள ஓஜிகுப்பத்தை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது.

இவருக்கு வேறு எதாவது வழக்குகளில் தொடர்பு உள்ளதா? என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். தப்பி ஓடிய மற்ற 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

Next Story