சேலத்தில், 2 நாட்களில் ‘ஹெல்மெட்’ அணியாமல் சென்ற 2,300 பேர் மீது வழக்கு - போலீசார் அதிரடி நடவடிக்கை


சேலத்தில், 2 நாட்களில் ‘ஹெல்மெட்’ அணியாமல் சென்ற 2,300 பேர் மீது வழக்கு - போலீசார் அதிரடி நடவடிக்கை
x
தினத்தந்தி 31 Aug 2019 10:00 PM GMT (Updated: 31 Aug 2019 9:12 PM GMT)

சேலத்தில் கடந்த 2 நாட்களில் மட்டும் ‘ஹெல்மெட்‘ அணியாமல் சென்ற 2,300 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து அதிரடி நடவடிக்கை எடுத்தனர்.

சேலம், 

இருசக்கர வாகன ஓட்டிகள் கட்டாயமாக ‘ஹெல்மெட்‘ அணிய வேண்டும், கார்களில் செல்பவர்கள் சீட் பெல்ட் அணிய வேண்டும் என சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. தற்போது ஹெல்மெட் அணியாமல் செல்பவர்களுக்கு ரூ.100 அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே இந்த அபராத தொகையை ரூ.1,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

சேலத்தில், ஹெல்மெட் அணியாமல் செல்பவர்கள், காரில் சீட் பெல்ட் அணியாமல் செல்பவர்கள், குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்கள் மீது போலீசார் அபராதம் விதித்து வருகின்றனர். இதற்காக 15 போலீஸ் குழுவினர் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் முக்கிய இடங்களில் நின்று கொண்டு வாகன சோதனை நடத்தி ஹெல்மெட் அணியாமல் செல்பவர்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இவர்களை பார்த்ததும் வாகன ஓட்டிகள் திரும்பி வேறுபக்கமாக செல்வதை பார்க்க முடிந்தது.

இதுகுறித்து உயர் போலீஸ் அதிகாரிகள் கூறும்போது, ‘சேலத்தில் போக்குவரத்து விதிகளை மீறுபவர்கள் மீது அபராதம் விதிப்பதற்காக 15 போலீஸ் குழுக்கள் அமைக்கப்பட்டு வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 2 நாட்களில் மட்டும் குறிப்பாக ஹெல்மெட் அணியாமல் சென்ற 2,300 வாகன ஓட்டிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்களுக்கு தலா ரூ.100 மட்டும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்ட அபராத தொகை உடனடியாக வசூலிக்கப்பட மாட்டாது. இதற்கான உத்தரவு வந்த பின்னர் அந்த தொகை வசூலிக்கப்படும்“ என்றனர்.

Next Story