அரூர் அருகே, மாணவியை பலாத்காரம் செய்ய முயன்ற 4 வாலிபர்கள் கைது


அரூர் அருகே, மாணவியை பலாத்காரம் செய்ய முயன்ற 4 வாலிபர்கள் கைது
x
தினத்தந்தி 1 Sept 2019 3:30 AM IST (Updated: 1 Sept 2019 2:44 AM IST)
t-max-icont-min-icon

அரூர் அருகே 7-ம் வகுப்பு மாணவியை பலாத்காரம் செய்ய முயன்ற 4 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

அரூர்,

தர்மபுரி மாவட்டம் அரூர் பகுதியை சேர்ந்த 12 வயது மாணவி 7-ம் வகுப்பு படித்து வருகிறார். சம்பவத்தன்று அந்த மாணவி வீட்டில் இருந்து பள்ளிக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது, அந்த பகுதியில் கேரம் போர்டு விளையாடிக் கொண்டிருந்த 2 பேர் அந்த மாணவியை பள்ளியில் விடுவதாக கூறி மோட்டார்சைக்கிளில் அழைத்து சென்றனர். ஆனால் அந்த நபர்கள் பள்ளிக்கு செல்லாமல் அருகில் உள்ள சோளக்காட்டிற்கு மாணவியை அழைத்து சென்றனர்.

அங்கிருந்து, செல்போனில் தொடர்பு கொண்டு, அவர்களது நண்பர்கள் 2 பேரை வரவழைத்துள்ளனர். பின்னர் 4 பேரும் சேர்ந்து மாணவியின் வாயில் கைக்குட்டையை வைத்து அடைத்து பலாத்காரம் செய்ய முயன்றுள்ளனர். அப்போது மாணவியின் அலறல் சத்தம் கேட்டு அந்த வழியாக சென்றவர்கள் காட்டிற்குள் சென்றனர். இதனால் 4 பேரும், மாணவியை விட்டு, விட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.

இந்த சம்பவம் குறித்து, கோபிநாதம்பட்டி போலீஸ் நிலையத்தில் மாணவியின் பெற்றோர் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான 4 பேரையும் வலைவீசி தேடி வந்தனர். இதனிடையே மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற அதேபகுதியை சேர்ந்த கனியரசு(வயது23), அதியமான்(26), மலையப்பன்(21), அருண்குமார்(24) ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

பின்னர் அவர்கள் 4 பேரையும் தர்மபுரி மாவட்ட மகளிர் கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

Next Story