73 மாணவ, மாணவிகளுக்கு ரூ.1¾ லட்சம் கல்வி உதவித்தொகை - அமைச்சர் தங்கமணி வழங்கினார்


73 மாணவ, மாணவிகளுக்கு ரூ.1¾ லட்சம் கல்வி உதவித்தொகை - அமைச்சர் தங்கமணி வழங்கினார்
x
தினத்தந்தி 1 Sept 2019 4:15 AM IST (Updated: 1 Sept 2019 2:44 AM IST)
t-max-icont-min-icon

குமாரபாளையம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்ற முதல்-அமைச்சரின் சிறப்பு மக்கள் குறைதீர்க்கும் முகாம்களில் 73 மாணவ, மாணவிகளுக்கு ரூ.1¾ லட்சம் கல்வி உதவித்தொகையை அமைச்சர் தங்கமணி வழங்கினார்.

பள்ளிபாளையம், 

குமாரபாளையம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் முதல்-அமைச்சரின் சிறப்பு மக்கள் குறைதீர்க்கும் திட்ட முகாம்கள் மாவட்ட கலெக்டர் ஆசியா மரியம் தலைமையில் நடைபெற்றது. வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையின் சார்பில் நடைபெற்ற இந்த முகாம்களில் பொதுமக்களிடமிருந்து முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, வீட்டுமனைப்பட்டா, மின்னணு குடும்ப அட்டை கோருதல் உள்ளிட்ட 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோரிக்கை மனுக்களை மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் பி.தங்கமணி பெற்று, உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

குமாரபாளையம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கொக்கராயன்பேட்டை, பாப்பம்பாளையம், ஓடப்பள்ளி, காடச்சநல்லூர், ஆலாம்பாளையம், பள்ளிபாளையம் அக்ரஹாரம், எலந்தைக்குட்டை, பாதரை, சவுதாபுரம், களியனூர் அமானி, களியனூர் அக்ரஹாரம், சமயசங்கிலி, குப்பாண்டபாளையம், தட்டாங்குட்டை ஆகிய ஊராட்சிகளுக்கு குறைதீர்க்கும் திட்ட முகாம்கள் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சி்களில் அமைச்சர் தங்கமணி பேசும்போது கூறியதாவது:- நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை நடைபெற்ற முதல்-அமைச்சரின் சிறப்பு குறைதீர்க்கும் திட்ட முகாம்களில் மொத்தம் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டுள்ளன. முதல்-அமைச்சர் முதியோருக்கான மாதாந்திர ஓய்வூதியம் புதியதாக 5 லட்சம் பயனாளிகளுக்கு வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். அதனடிப்படையில் நாமக்கல் மாவட்டத்திற்கு கிடைக்கப்படும் எண்ணிக்கை அடிப்படையில் முதியோர் ஓய்வூதியம் புதிதாக பயனாளிகளுக்கு வழங்கப்பட உள்ளது.

குமாரபாளையம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் தேவையான அடிப்படை வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன. குமாரபாளையம் பகுதிக்கு நீண்டகால தீர்வாக ரூ.400 கோடியில் கூட்டுக்குடிநீர் திட்ட பணிகள் விரைவாக நடைபெற்று வருகின்றன. இன்னும் ஒரு வருட காலத்திற்குள் கூட்டுக்குடிநீர் திட்டப்பணிகள் முடிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.

இவ்வாறு அமைச்சர் கூறினார்.

நிகழ்ச்சிகளில் 73 மாணவ, மாணவிகளுக்கு ரூ.1 லட்சத்து 70 ஆயிரம் மதிப்பில் கல்வி உதவித்தொகை காசோலைகளையும், குமாரபாளையத்தில் நடைபெற்ற மின்விபத்தில் முத்துசாமி உயிரிழந்ததற்காக, அவரது மனைவி பழனியம்மாளுக்கு நிவாரண நிதியாக ரூ.2 லட்சத்திற்கான காசோலையையும் அமைச்சர் தங்கமணி வழங்கினார்.

இதில் மாவட்ட வருவாய் அலுவலர் துரை ரவிச்சந்திரன், மின்சார வாரிய தலைமை பொறியாளர் சந்திரசேகர், சங்ககிரி கோட்ட செயற்பொறியாளர் பாலசுப்பிரமணியன், தனித்துணை கலெக்டர் (சமூக பாதுகாப்புத்திட்டம்) எஸ்.என்.பாலசுப்பிரமணியன், திருச்செங்கோடு உதவி கலெக்டர் மணிராஜ், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சீனிவாசன், தாசில்தார் தங்கம் உள்பட வருவாய்த்துறை அலுவலர்கள்், அரசுத்துறை அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Next Story