பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி; கடலூரில் துப்புரவு பணியாளர்கள் பேரணி
கடலூரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி துப்புரவு பணியாளர்கள் மற்றும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குபவர்களின் பேரணி-மாநாடு நடைபெற்றது.
கடலூர்,
தமிழ்நாடு கிராம ஊராட்சி மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குபவர்கள், துப்புரவு பணியாளர்கள், தூய்மை காவலர்கள் சங்கம் சார்பில் கடலூரில் பேரணி நடந்தது. இதற்கு ஓட்சா கூட்டமைப்பு மாநில தலைவர் ராமர் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ராஜேந்திரன், பொருளாளர் பரமசிவம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட தலைவர் சாமிதுரை வரவேற்றார்.
பேரணியில் கலந்துகொண்டவர்கள் அனைவருக்கும் காலைமுறை ஊதியம் குறைந்தபட்ச மாத ஊதியம் ரூ.18 ஆயிரம் வழங்க வேண்டும். தூய்மை காவலர்களுக்கு குறைந்தபட்ச மாத ஊதியம் ரூ.13 ஆயிரத்து 600 வழங்கவேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளை கையில் பிடித்தபடி கோஷம் எழுப்பினர். கடலூர் ஜவான்பவான் பில்டிங் அருகில் இருந்து புறப்பட்ட இந்த பேரணி அண்ணாபாலம், பாரதிசாலை வழியாக மஞ்சக்குப்பம் டவுன் ஹாலை சென்றடைந்தது.
தொடர்ந்து அங்கு மண்டல மாநாடு நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளர்களாக ஓட்சா கூட்டமைப்பு தலைவர் அமல்ராஜ், மாநில பிரசார செயலாளர் ஆனந்ததுரை ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.
இதில் மாநில தலைவர்கள் ஜோதிமணி, கருணாகரன், கிருஷ்ணன், சக்திவேல், லட்சுமணன், குமார் மற்றும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குபவர்கள், துப்புரவு பணியாளர்கள், தூய்மை காவலர்கள் கலந்து கொண்டனர்.
மாநாட்டில் அனைவருக்கும் காலைமுறை ஊதியம் குறைந்தபட்ச மாத ஊதியம் ரூ.18 ஆயிரம் வழங்குதல், பணி ஓய்வு காலத்தில் பணிக்கொடை ரூ.1 லட்சம் வழங்க வேண்டும். மாதந்தோரும் ரூ.5 ஆயிரம் ஓய்வூதியம் வழங்க வேண்டும்.
பணியாளர் மரணமடைந்தால் குடும்பத்தில் உள்ள ஒரு நபருக்கு வாரிசு அடிப்படையில் கல்வித்தகுதிக்கு ஏற்ப பணி வழங்கிட வேண்டும். கிராம ஊராட்சியில் ஓட்சா மற்றும் துப்புரவு பணியாளர்கள் காலிப்பணியிடங்களை வட்டார வளர்ச்சி அலுவலரை கொண்டு நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
Related Tags :
Next Story