அரசு பள்ளி நுழைவு வாயிலில் பெயரை திருத்தியதற்கு எதிர்ப்பு: மங்கலம்பேட்டையில் பொதுமக்கள் சாலை மறியல்
மங்கலம்பேட்டை அரசு பள்ளி நுழைவு வாயிலில் பெயரை திருத்தியதை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
விருத்தாசலம்,
விருத்தாசலம் அடுத்த மங்கலம்பேட்டையில் அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியின் நுழைவு வாயிலுக்கு வேணுகோபால் செட்டியார் நினைவு நுழைவுவாயில் எனப்பெயரிடப்பட்டு, அதில் எழுதப்பட்டுள்ளது. இந்நிலையில் வேணுகோபால் என்று மட்டுமே பெயரை எழுதிட வேண்டும் என்றும், நுழைவு வாயிலில் தற்போது எழுதப்பட்டு இருக்கும் பெயரை உடனடியாக திருத்தம் செய்திட வேண்டும் என்று கூறி கல்வித்துறை மற்றும் தலைமை செயலகத்திற்கு புகார் மனு சென்றதாக கூறப்படுகிறது. இவ்வாறு சர்ச்சை எழுந்த நிலையில் கல்வித்துறை நிர்வாகம் வேணுகோபால் நினைவு நுழைவாயில் என பெயரை திருத்தம் செய்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மங்கலம்பேட்டை பஸ் நிறுத்தத்திற்கு திரண்டு சென்று விருத்தாசலம்-உளுந்தூர்பேட்டை சாலையில் திடீரென மறியலில் ஈடுபட்டனர். அப்போது அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி நுழைவாயிலில் ஏற்கனவே இருந்ததுபோல பெயரை திருத்த செய்து எழுதிட வேண்டும் என்று கூறி அவர்கள் கோஷங்களை ஏழுப்பினர்.
இதுபற்றி தகவல் அறிந்த விருத்தாசலம் உதவி போலீஸ் சூப்பிரண்டு தீபா சத்தியன், மங்கலம்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சாகுல் ஹமீது, சப்-இன்ஸ்பெக்டர் பிரசன்னா மற்றும் போலீசார் விரைந்து வந்து, மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்களது கோரிக்கையை கேட்டறிந்த போலீசார், இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் தெரிவித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.
மேலும் விருத்தாசலம் மாவட்ட கல்வி அலுவலர் செல்வகுமாரை போலீசார் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு தெரியப்படுத்தினர். அப்போது அவர் இதுபற்றி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இதில் சமாதானமடைந்த அவர்கள், ஏற்கனவே இருந்தது போன்று பெயரை திருத்தம் செய்து எழுதவில்லையென்றால் அடுத்தகட்ட போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று கூறிவிட்டு அங்கிருந்து அமைதியாக கலைந்து சென்றனர். இதன் காரணமாக அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
Related Tags :
Next Story