பாண்டுகுடி பகுதிக்கு ஒரு வாரமாக குடிநீர் வினியோகம் தடை பட்டதால் காலி குடங்களுடன் குவிந்த பெண்கள்


பாண்டுகுடி பகுதிக்கு ஒரு வாரமாக குடிநீர் வினியோகம் தடை பட்டதால் காலி குடங்களுடன் குவிந்த பெண்கள்
x
தினத்தந்தி 2 Sept 2019 3:45 AM IST (Updated: 1 Sept 2019 7:50 PM IST)
t-max-icont-min-icon

குடிநீர் வினியோகம் தடைபட்டதால் காலி குடங்களுடன் பெண்கள் குவிந்தனர்.

தொண்டி,

திருவாடானை அருகே உள்ள பாரதி நகரில் பாண்டுகுடி கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் பல கிராமங்களுக்கு குடிநீர் வினியோகம் செய்வதற்கு ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு நீரேற்று நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்குள்ள மோட்டார் அடிக்கடி பழுதாகி விடும் நிலையில் 25– க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு குடிநீர் வினியோகம் அடிக்கடி தடைபட்டு விடுகிறது.

இந்த நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு பாரதி நகரில் உள்ள நீரேற்று நிலையத்தில் பழுதான மோட்டாரை சீரமைக்க காலதாமதம் ஏற்பட்டது. இதனால் இந்த பகுதியில் உள்ள பாண்டுகுடி கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் குடிநீர் வினியோகம் செய்யப்படும் திருவாடானை, பாண்டுகுடி, கோடனூர், டி.கிளியூர், மாதவன்கோட்டை, கே.கிளியூர் மணிகண்டி, சிநேகவல்லிபுரம், திருவெற்றியூர், கோனேரிகோட்டை, கிழவண்டி சூச்சனி, மகாலிங்கபுரம் தொத்தார்கோட்டை, திருவடிமிதியூர் உள்ளிட்ட கிராமங்களில் கடந்த 7 தினங்களாக கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது.

இதனால் கிராமங்களில் உள்ள பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இதனால் தினமும் இந்த கிராம மக்கள் தண்ணீர் விலை கொடுத்து வாங்கி பயன்படுத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர். இதனால் காலி குடங்களுடன் குடிநீரை தேடி அலைந்து திரிய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர். இந்த நிலையில் பொதுமக்களின் தொடர்ந்த கோரிக்கைக்கு பின்னர் ஒரு வாரத்திற்கு பின்பு குடிநீர் மோட்டார் பழுதுபார்க்கப்பட்டது. ஆனாலும் பாண்டுகுடி பகுதிக்கு குடிநீர் செல்வதில் காலதாமதம் ஆனது.

இந்த நிலையில் பாண்டுகுடி அருகேயுள்ள மாதவன் கோட்டை விலக்கு பகுதியில் உள்ள ஒரு குடிநீர் குழாயில் காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் குடிநீர் வருவதை அறிந்து ஏராளமான பெண்கள் காலி குடங்களுடன் குவிந்தனர். இதன் காரணமாக திருவாடானை–ஓரியூர் சாலையில் குடிநீர் குடங்களை ஏற்றிச் செல்லும் தள்ளு வண்டிகள் அணிவகுத்து நின்றன. நீண்ட நேரம் காத்திருந்து குடிநீர் பிடித்து சென்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் பாரதிநகர் நீரேற்று நிலையத்தில் உள்ள ஆழ்துளை கிணற்றில் இருந்து பொதுமக்களுக்கு உடனடியாக குடிநீர் வினியோகம் நடைபெற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story