மாவட்டத்தில் குரூப்-4 தேர்வை 64,724 பேர் எழுதினார்கள் - கலெக்டர் ஆய்வு


மாவட்டத்தில் குரூப்-4 தேர்வை 64,724 பேர் எழுதினார்கள் - கலெக்டர் ஆய்வு
x
தினத்தந்தி 2 Sept 2019 4:15 AM IST (Updated: 1 Sept 2019 10:28 PM IST)
t-max-icont-min-icon

விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற குரூப்-4 தேர்வை 64 ஆயிரத்து 724 பேர் எழுதினார்கள். விழுப்புரம் அரசு பள்ளி மையத்தில் நடந்த தேர்வை கலெக்டர் சுப்பிரமணியன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

விழுப்புரம், 

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் கிராம நிர்வாக அலுவலர், நில அளவியர் உள்பட 8 பதவிகளில் காலியாக உள்ள 6,491 அரசு பணியிடங்களை நிரப்புவதற்காக குரூப்-4 தேர்வு நேற்று தமிழகம் முழுவதும் நடைபெற்றது. அந்த வகையில் விழுப்புரம் மாவட்டத்தில் 74 ஆயிரத்து 913 பேர் தேர்வு எழுதுவதற்காக விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருக்கோவிலூர், திண்டிவனம், செஞ்சி, உளுந்தூர்பேட்டை, விக்கிரவாண்டி உள்ளிட்ட 13 தாலுகாக்களில் 261 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. தேர்வு காலை 10 மணிக்கு தொடங்குவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் நேற்று அதிகாலை முதலே இளைஞர்களும், இளம்பெண்களும் இருசக்கர வாகனம், ஆட்டோ, பஸ் போன்ற வாகனங்களில் வந்தனர். பின்னர் அங்கு வைக்கப்பட்டிருந்த தகவல் பலகையில் தங்களுக்கான தேர்வு அறையை தெரிந்து கொண்டு தேர்வு மைய வளாகத்துக்குள் அமர்ந்து படித்துக்கொண்டிருந்தனர்.

தேர்வு காலை 10 மணிக்கு தொடங்கியது. விழுப்புரம் அரசு பெண்கள் மற்றும் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தேர்வு மையங்களை கலெக்டர் சுப்பிரமணியன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- விழுப்புரம் மாவட்டத்தில் குரூப்-4 தேர்வை கண்காணிக்க பறக்கும் படையினர் மற்றும் நிலையான தேர்வு கூட அலுவலர் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. தேர்வு எழுத வருபர்கள் வந்து செல்ல ஏதுவாக சிறப்பு பஸ் வசதியும், மாற்றுத்திறனாளிகளுக்கு தேர்வு மையங்களில் தரை தளத்தில் தனி அறையும் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் அனைத்து தேர்வு மையங்களிலும் தடையில்லா மின்சாரம், குடிநீர் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டுள்ளது என்றார். ஆய்வின்போது மாவட்ட வருவாய் அலுவலர் பிரியா, கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சரவணக்குமார், விழுப்புரம் கோட்டாட்சியர் ராஜேந்திரன், வருவாய் ஆய்வாளர் சாதிக் ஆகியோர் உடன் இருந்தனர்.

மேலும் முறைகேடுகள் மற்றும் விதிமீறல்களை தடுப்பதற்காக அமைக்கப்பட்டிருந்த பறக்கும் படையினரும் தேர்வு மையங்களில் அதிரடி சோதனை மேற்கொண்டனர். நிலையான தேர்வு கூட அலுவலர்களும் தேர்வறைகளை தீவிரமாக கண்காணித்தனர். இதில் ஆள்மாறாட்டம், முறைகேடுகளில் ஈடுபட்டதாக யாரும் பிடிபடவில்லை. அனைத்து தேர்வு மையங்களின் நுழைவு வாசல்களிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. தேர்வர்களை தவிர அன்னியர்கள் யாரையும் உள்ளே செல்ல போலீசார் அனுமதிக்கவில்லை. தேர்வு முழுவதும் வீடியோ மூலம் பதிவு செய்யப்பட்டது.

காலை 10 மணிக்கு தொடங்கிய தேர்வு பகல் 1 மணிக்கு முடிவடைந்தது. தேர்வு எழுத விண்ணப்பித்த 74 ஆயிரத்து 913 பேரில் 64 ஆயிரத்து 724 பேர் மட்டும் தேர்வு எழுதினர். 10 ஆயிரத்து 171 பேர் தேர்வு எழுத வரவில்லை.

Next Story