சின்னசேலம் அருகே, ஆசைக்கு இணங்க மறுத்த பெண்ணை உயிரோடு எரித்து கொல்ல முயற்சி - வாலிபர் வெறிச்செயல்


சின்னசேலம் அருகே, ஆசைக்கு இணங்க மறுத்த பெண்ணை உயிரோடு எரித்து கொல்ல முயற்சி - வாலிபர் வெறிச்செயல்
x
தினத்தந்தி 2 Sept 2019 4:00 AM IST (Updated: 1 Sept 2019 10:36 PM IST)
t-max-icont-min-icon

சின்னசேலம் அருகே ஆசைக்கு இணங்க மறுத்த பெண்ணை உயிரோடு எரித்து கொலை செய்ய முயன்ற வாலிபர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

சின்னசேலம்,

சின்னசேலம் அருகே பாக்கம்பாடி கிராமத்தை சேர்ந்தவர் சின்னதுரை. இவருடைய மனைவி அருணாதேவி(வயது 28). இவர்கள் 2 பேருக்கும் திருமணமாகி 7 ஆண்டுகள் ஆகிறது. இந்த தம்பதிக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ளனர். சின்னதுரை சிங்கப்பூரில் ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.

இந்த நிலையில் கடந்த பொங்கல் பண்டிகையின்போது அருணாதேவியின் வீட்டுக்கு சீர்வரிசை பொருட்களை அவருடைய பெரியம்மா மகனான கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே அகரம் கிராமத்தை சேர்ந்த பிரசாந்த் என்பவர் கொண்டு சென்றார். அவருடன் அதே ஊரைச்சேர்ந்த அவருடைய நண்பரான ஏழுமலை (19) என்பவரும் சென்றார்.

அங்கு அருணாதேவியை பார்த்த ஏழுமலைக்கு அவர் மீது ஆசை ஏற்பட்டது. இதையடுத்து அவரை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். மேலும் அருணாதேவியிடம் செல்போனிலும் பேசி வந்துள்ளார். தனது உறவினரின் நண்பர் என்பதால் அவரும் பேசிவந்துள்ளார்.

நாளடைவில் ஏழுமலையின் பேச்சு தவறாக இருந்ததால் அவரிடம் பேசுவதை அருணாதேவி நிறுத்தியதாக தெரிகிறது. இருப்பினும் அவர் தொடர்ந்து செல்போன் மூலம் பேசி தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதற்கு அவர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் ஏழுமலை, சின்னதுரையின் வீட்டுக்கு சென்றார். பின்னர் அவர் அங்கிருந்த அருணாதேவியிடம் உன்னை நான் விரும்புகிறேன். எனவே தனது ஆசைக்கு இணங்குமாறு கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் மறுப்பு தெரிவித்ததோடு உடனே வீட்டை விட்டு வெளியே செல்லுமாறு கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவர் வீட்டில் கேனில் இருந்த மண்எண்ணெயை எடுத்து அருணாதேவியின் மீது ஊற்றி தீ வைத்தார்.

இதில் அவர் மீது தீ பற்றி எரிந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக ஏழுமலையின் மீதும் தீ பரவி எரிந்தது. இதில் வலி தாங்க முடியாமல் அவர்கள் 2 பேரும் அலறி துடித்தனர். இந்த சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து அவர்களை மீட்டனர். பின்னர் அருணாதேவியை சேலம் அரசு மருத்துவமனைக்கும், ஏழுமலையை ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கும் அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இது குறித்த புகாரின் பேரில் கீழ்க்குப்பம் போலீசார் ஏழுமலை மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story