டாஸ்மாக் கடையில் தகராறை தடுக்க சென்ற போலீஸ்காரருக்கு பாட்டிலால் குத்து வாலிபருக்கு வலைவீச்சு


டாஸ்மாக் கடையில் தகராறை தடுக்க சென்ற போலீஸ்காரருக்கு பாட்டிலால் குத்து வாலிபருக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 2 Sept 2019 3:00 AM IST (Updated: 1 Sept 2019 10:55 PM IST)
t-max-icont-min-icon

டாஸ்மாக் கடையில் ஏற்பட்ட தகராறை தடுக்க சென்ற சப்-இன்ஸ்பெக்டரை பாட்டிலால் குத்த முயன்றதை தடுக்க முயன்ற போலீஸ்காரர் கையில் பாட்டிலால் குத்தி விட்டு வாலிபர் தப்பி ஓடிவிட்டார்.

பூந்தமல்லி,

சென்னை வடபழனி ஆற்காடு சாலையில் உள்ள டாஸ்மாக் கடையில் நேற்று முன்தினம் இரவு சிலர் குடிபோதையில் தகராறு செய்வதாக போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் வந்தது. இதுகுறித்து விருகம்பாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அப்போது பணியில் இருந்த சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் போலீஸ்காரர் சிவகுரு ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்றனர்.

போலீசாரை கண்டதும் தகராறில் ஈடுபட்டவர்கள் தப்பி ஓடினார்கள். அதில் ஒரு வாலிபர் மட்டும் அங்கு அடுக்கிவைக்கப்பட்டு இருந்த காலி பாட்டில்கள் மூட்டைகளுக்கு அருகே பதுங்கினார். அவரை சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ், மடக்கிப்பிடித்து போலீஸ் நிலையம் அழைத்து செல்ல முயன்றார்.

இதனால் ஆத்திரம் அடைந்த அந்த வாலிபர், அங்கிருந்த ஒரு காலி பாட்டிலை எடுத்து உடைத்து சப்-இன்ஸ்பெக்டரை குத்த முயன்றார். அப்போது அவருக்கு பின்னால் நடந்து வந்த போலீஸ்காரர் சிவகுரு இதை தடுக்க முயன்றார். இதில் அவரது கையில் பாட்டிலால் குத்திவிட்டு அந்த வாலிபர் தப்பி ஓடிவிட்டார். இதில் காயம் அடைந்த போலீஸ்காரர் சிவகுரு, அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று திரும்பினார்.

இதுகுறித்து விருகம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதில் போலீஸ்காரரை பாட்டிலால் குத்திய வாலிபர் பெயர் அந்தோணி (வயது 26) என்பது தெரிய வந்தது. தலைமறைவாக உள்ள அவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Next Story