காங்கேயம் அருகே கோவிலில் 6 மாத குழந்தையை போட்டு சென்றது யார்? போலீசார் விசாரணை


காங்கேயம் அருகே கோவிலில் 6 மாத குழந்தையை போட்டு சென்றது யார்? போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 2 Sept 2019 5:30 AM IST (Updated: 2 Sept 2019 12:38 AM IST)
t-max-icont-min-icon

காங்கேயம் அருகே, கோவிலில் 6 மாத பெண் குழந்தையை விட்டுச் சென்றது யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

காங்கேயம்,

காங்கேயம்-கோவை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள அலப்பச்சாக்கவுண்டபுதூர் பகுதியில் மாதேஸ்வரன் கோவில் உள்ளது. இந்த நிலையில் நேற்று பகல் 11 மணி அளவில் இந்தக்கோவிலில் இருந்து குழந்தையின் அழுகுரல் சத்தம் கேட்டது.

இதனைக் கேட்ட அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் கோவிலுக்குச் சென்று பார்த்தனர். அப்போது, அங்கே 6 மாதமே ஆன ஒரு பெண் குழந்தை தனியாக அழுதுகொண்டிருந்தது. இதனை பார்த்த அக்கம் பக்கம் உள்ள பொதுமக்கள் அதிர்ச்சியடைந்து, காங்கேயம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

அதைத்தொடர்ந்து உடனடியாக விரைந்து வந்த போலீசார் அந்தக் குழந்தையை மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம் காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர், அந்தக் குழந்தையை திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அந்த குழந்தை பாதுகாக்கப்பட்டு வருகிறது.

இந்தக்குழந்தையை அனாதையாக விட்டுச் சென்றது யார்? வறுமையின் காரணமாக விட்டுச் சென்றார்களா? அல்லது பெண் குழந்தை என்பதால் வேண்டாம் என்று விட்டுச் சென்றார்களா? அல்லது திருமணமாகாத பெண்ணுக்கு பிறந்த குழந்தையா? அல்லது நகைக்காக குழந்தையை கடத்தி நகைகளை கழட்டி விட்டு கோவிலில் கொண்டு வந்து போட்டு விட்டு சென்றார்களா? என பல்வேறு கோணங்களில் காங்கேயம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவிலில் 6 மாத பெண் குழந்தையை போட்டுவிட்டு சென்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story