தெற்கு பொய்கைநல்லூரில் ஆபத்தான டிரான்ஸ்பார்மர் அகற்றப்படுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு


தெற்கு பொய்கைநல்லூரில் ஆபத்தான டிரான்ஸ்பார்மர் அகற்றப்படுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு
x
தினத்தந்தி 2 Sept 2019 4:00 AM IST (Updated: 2 Sept 2019 12:42 AM IST)
t-max-icont-min-icon

தெற்கு பொய்கைநல்லூரில் ஆபத்தான நிலையில் உள்ள டிரான்ஸ்பார்மரை அப்புறப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

நாகப்பட்டினம்,

நாகை அருகே தெற்கு பொய்கைநல்லூரில் மாத்தான் காடு என்ற பகுதி உள்ளது. இந்த பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். நாகையில் இருந்து அக்கரைப்பேட்டை, தெற்கு பொய்கைநல்லூர் வழியாக வேளாங்கண்ணி செல்லும் முக்கியத்துவம் வாய்ந்த சாலையை ஏராளமான பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த சாலை ஓரத்தில் டிரான்ஸ்பார்மர் உள்ளது. இதன் மூலம் அப்பகுதியில் உள்ள வீடுகள், தெருவிளக்குகள் மற்றும் விவசாய மோட்டார்கள் உள்ளிட்டவைகள் மின்வினியோகம் பெற்று வருகின்றன.

இந்த நிலையில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வீசிய கஜா புயலால் டிரான்ஸ்பார்மர் சேதமடைந்தது. இதில் உள்ள தூண்களில் சிமெண்ட் காரைகள் பெயர்ந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரிகின்றன. ஆபத்தான நிலையில் உள்ள டிரான்ஸ்பார்மர் வழியாக செல்லும் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் மற்றும் பொதுமக்கள் மிகவும் அச்சத்துடனேயே சென்று வருகின்றனர்.

நடவடிக்கை

தற்போது வேளாங்கண்ணி மாதா பேராலய திருவிழா நடைபெற்று வருவதால் பக்தர்கள் இந்த வழியாக தான் பாதயாத்திரை செல்கின்றனர். இந்த டிரான்ஸ்பார்மரை சீரமைத்து தர வேண்டும் என அப்பகுதி மக்கள் மின்வாரிய துறையினரிடம் மனுக்கள் அளித்தும், இதுவரை சீரமைக்கவில்லை என வேதனை தெரிவிக்கின்றனர்.

எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள், ஆபத்தான நிலையில் உள்ள டிரான்ஸ்பார்மரால் ஏதேனும் விபத்துகள் நடைபெறுவதற்கு முன்பு அதனை அகற்றி விட்டு, புதிய டிரான்ஸ்பார்மர் அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த பகுதி பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.



Next Story