அறந்தாங்கி அருகே விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயம்


அறந்தாங்கி அருகே விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயம்
x
தினத்தந்தி 2 Sept 2019 4:15 AM IST (Updated: 2 Sept 2019 1:38 AM IST)
t-max-icont-min-icon

அறந்தாங்கி அருகே விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

அறந்தாங்கி,

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கியை அடுத்த மேலப்பெருங்காடு கிராமத்தில் செல்வ விநாயகர் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டு தோறும் முத்தரையர் சமுதாயத்தினர் சார்பில், விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு மாட்டுவண்டி பந்தயம் நடை பெறுவது வழக்கம். அதேபோல் நேற்று மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது. இதில் திருச்சி, தஞ்சை, சிவகங்கை, தேனி, ராமநாதபுரம், புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன. மூன்று பிரிவுகளாக நடைபெற்ற பந்தையத்தில் பெரிய மாடு பிரிவில் 9 மாட்டு வண்டிகளும், நடுமாடு பிரிவில் 17 மாட்டு வண்டிகளும், கரிச்சான் பிரிவில் 35 மாட்டு வண்டிகளும் கலந்து கொண்டன.

பரிசு

இதைத்தொடர்ந்து மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது. இதில் 3 பரிவுகளிலும் மாட்டு வண்டிகள் சீறிப்பாய்ந்து ஓடின. பந்தையத்தில் கலந்து கொண்டு முதல் மூன்று இடங்களை பிடித்த மாட்டு வண்டி உரிமையாளர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. மேலும் மாடுகளை சிறப்பாக ஓட்டி வந்தவர்களுக்கு கொடி பரிசு, சிறப்பு பரிசு மற்றும் கேடயங்கள் கொடுத்து கவுரவிக்கப்பட்டது. மேலும் பந்தையத்தில் கலந்து கொண்ட அனைத்து மாட்டு வண்டிகளுக்கும் பரிசு வழங்கப்பட்டது.

பந்தயத்தை காண மேலப்பெருங்காடு உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து திரளான பொதுமக்கள் பந்தயத்தை கண்டு களித்தனர்.

அறந்தாங்கி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். இதற்கான ஏற்பாடுகளை மேலப் பெருங்காடு கிராம மக்கள் செய்திருந்தனர்.

Next Story