விநாயகர் சதுர்த்தி விழா இன்று கொண்டாட்டம்: காந்தி மார்க்கெட்டில் பொருட்கள் வாங்க குவிந்த மக்கள்


விநாயகர் சதுர்த்தி விழா இன்று கொண்டாட்டம்: காந்தி மார்க்கெட்டில் பொருட்கள் வாங்க குவிந்த மக்கள்
x
தினத்தந்தி 2 Sept 2019 4:15 AM IST (Updated: 2 Sept 2019 1:59 AM IST)
t-max-icont-min-icon

விநாயகர் சதுர்த்தி விழா இன்று கொண்டாடப்படுவதையொட்டி நேற்று காந்தி மார்க்கெட்டில் பொருட்கள் வாங்க மக்கள் குவிந்தனர்.

திருச்சி,

விநாயகர் சதுர்த்தி விழா இன்று(திங்கட்கிழமை) நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி இந்து அமைப்புகள், தனியார் அமைப்புகள், பொதுமக்கள் சார்பில் பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடு நடத்தப்படும். திருச்சி மாநகரில் 244 சிலைகளும், மாவட்டத்தில் 1,029 சிலைகளும் பிரதிஷ்டை செய்ய போலீசார் அனுமதி வழங்கி உள்ளனர். மேலும், ரசாயனம் பூசப்பட்ட விநாயகர் சிலைகளை நீரில் கரைக்கக்கூடாது. சிலை வைக்கப்பட்டுள்ள இடத்தில் எளிதில் தீப்பற்றக்கூடிய வகையில் கொட்டகை அமைக்கக்கூடாது. விநாயகர் சிலை ஊர்வலத்தின்போது வெடி, வெடிக்கக்கூடாது என்பன உள்பட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இதுதவிர சிலைகள் வைக்கப்பட்டுள்ள இடத்தில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும். போலீசாருடன் சேர்ந்து சிலை அமைப்பாளர்களும் 24 மணிநேரம் பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும் எனவும் போலீசார் அறிவுறுத்தி உள்ளனர். அதன்படி சிலைகள் வைக்கப்பட்டுள்ள இடத்தில் போலீசார் சுழற்சி முறையில் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள். மாநகர் மாவட்டத்தில் 1,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள்.

மலைக்கோட்டை

இதேபோல, திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோவில் உச்சியில் உள்ள உச்சி பிள்ளையார், மலைஅடிவாரத்தில் உள்ள மாணிக்க விநாயகருக்கு விநாயகர் சதுர்த்தியையொட்டி 150 கிலோ எடையில் ஒரே கொழுக்கட்டை செய்யப்பட்டு படைக்கப்படுகிறது. இதில் பாதி மாணிக்க விநாயகருக்கும், பாதி உச்சி பிள்ளையாருக்கும் படைக்கப்படுகிறது. இன்று(திங்கட்கிழமை) காலை 9 மணிக்கு மேல் காலை 10 மணிக்குள் அர்ச்சகர்கள் மடப்பள்ளியில் இருந்து 150 கிலோ எடை கொண்ட கொழுக்கட்டையின் பாதியை உச்சிபிள்ளையாருக்கு கொண்டு செல்கிறார்கள். அங்கு படைக்கப்பட்டு பிரசாதமாக பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது. அதேபோல் 75 கிலோ எடை கொண்ட கொழுக்கட்டை அடிவாரத்தில் உள்ள மாணிக்க விநாயகருக்கு படைக்கப்படுகிறது. இதுவும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும்.

மக்கள் குவிந்தனர்

சதுர்த்தியையொட்டி திருச்சி காந்தி மார்க்கெட்டில் விநாயகர் சிலைகள், காய்கறிகள், பூ, பழங்கள், அவல், பொரி, கடலை, வாழைப்பழம், விநாயகருக்கு வைக்க சிறிய குடைகள் விற்பனை அமோகமாக இருந்தது. அவற்றின் விலையும் வழக்கத்தை விட சற்று அதிகமாக இருந்தது. பொருட்கள் வாங்க திருச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான மக்கள் திருச்சி காந்தி மார்க்கெட்டில் குவிந்திருந்தனர். இனிப்பு கடைகளிலும் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

ராணுவ வீரர் விநாயகர்

விநாயகர் சதுர்த்தியையொட்டி திருச்சியை சேர்ந்த பள்ளி ஆசிரியர் ஒருவர் ராணுவ வீரர் போன்ற விநாயகரை வடிவமைத்து தீரன்நகரில் உள்ள தனது வீட்டின் முன்பாக வைத்து வணங்கி வருகிறார். அந்த விநாயகரை அருகில் இருப்பவர்கள் ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர்.

Next Story