கோவில்பட்டி அருகே வேன் கவிழ்ந்து 15 பேர் படுகாயம்


கோவில்பட்டி அருகே வேன் கவிழ்ந்து 15 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 2 Sept 2019 3:45 AM IST (Updated: 2 Sept 2019 1:59 AM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டி அருகே வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 15 பேர் படுகாயம் அடைந்தனர்.

கோவில்பட்டி,

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தை அடுத்துள்ள இளம்புவனம் பகுதியைச் சேர்ந்தவர் மாரிமுத்து (வயது 56). இவர் தனது மகளுக்கு மாப்பிள்ளை பார்ப்பதற்காக உறவினர்களுடன் வேனில் நெல்லை மாவட்டம் சிவகிரிக்கு நேற்று புறப்பட்டார். வேனை முத்துவேல்சாமி என்பவர் ஓட்டினார்.

வேன் கோவில்பட்டி அருகே இளையரசனேந்தல் மேலப்பட்டி விலக்கு பகுதியில் சென்று கொண்டு இருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக டயர் வெடித்து வேன் கவிழ்ந்தது. இதில் வேனில் இருந்த மாரிமுத்து, அவருடைய மனைவி ஆறுமுகத்தாய் (50), மகன் சுதாகர் (29), மருமகள் ஜெயசுதா (23), பேரன் கவின் எஸ்வந்த் (1) மற்றும் உறவினர்களான முத்துகருப்பசாமி, சொர்ணவேல் உள்பட 15 பேர் படுகாயம் அடைந்தனர்.

இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். மேலும் இதுகுறித்து கோவில்பட்டி மேற்கு போலீஸ் நிலையத்துக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து படுகாயம் அடைந்த 15 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் ஆறுமுகத்தாய், கவின் எஸ்வந்த், முத்துகருப்பசாமி, சொர்ணவேல் ஆகிய 4 பேர் மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதுகுறித்து கோவில்பட்டி மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து, வேன் டிரைவர் முத்துவேல்சாமியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story