ஊத்துக்கோட்டை அருகே கிருஷ்ணா நதி கால்வாய் சாலையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
ஊத்துக்கோட்டை அருகே மழையால் சேதம் அடைந்த கிருஷ்ணா நதி கால்வாய் சாலையை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுதுள்ளனர்.
ஊத்துக்கோட்டை,
கிருஷ்ணா நதி நீர் பங்கீட்டு திட்டத்தின்படி ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டம் கண்டலேறு அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் பூண்டி ஏரிக்கு வந்து சேர 177 கிலோ மீ்ட்டர் தூரத்துக்கு கால்வாய் அமைக்கப்பட்டது. இந்த கால்வாய் ஆந்திராவில் 152 கிலோ மீட்டர் தூரத்துக்கும், தமிழகத்தில் 25 கிலோ மீட்டர் தூரத்துக்கும் கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. கால்வாயை இரு மாநில பொதுப் பணித்துறை அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்ய, பொது மக்களின் பயன்பாட்டிற்காக கால்வாய் நெடுகிலும் சாலை அமைக்கப்பட்டுள்ளது. தமிழக எல்லையில் ஊத்துக்கோட்டை அருகே உள்ள தாமரைகுப்பம் ஜீரோ பாயின்டில் இருந்து பூண்டி ஏரி வரை 25 கிலோ மீட்டர் தூரத்துக்கு கால்வாய் நெடுகில் சாலை உள்ளது. இந்த சாலை பராமரிக்கப்படாததால் குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது.
குறிப்பாக ஊத்துக்கோட்டை அருகே உள்ள தொம்பரம்பேடு கிராம எல்லையில் சாலை மிக மோசமாக உள்ளது. கடந்த டிசம்பர் மாதத்தில் பெய்த பலத்த மழைக்கு சாலை சேதம் அடைந்தது. 20 மீட்டர் தூரத்துக்கு 15 அடி ஆழத்தில் சாலையில் பள்ளம் ஏற்பட்டது.
இதை அதிகாரிகள் சீரமைக்காததால் அருகே உள்ள அம்பேத்கர்நகர், தொம்பரம்பேடு, ஜங்காலபள்ளி, முஸ்லிம்நகர் கிராம மக்கள் அந்தவழியாக நடந்து செல்கின்றனர். ஆட்டோ மற்றும் இதர வாகனங்கள் செல்ல முடியாத நிலை உள்ளது. சாலையை சீரமைக்கவேண்டும் என்று வலியுறுத்தி இந்த கிராம மக்கள் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு கோரிக்கை மனு அளித்தும் இது வரை நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. ஆந்திராவில் 152 கிலோ மீட்டர் தூரத்துக்கு உள்ள கால்வாய் நெடுகிலும் உள்ள சாலை தார் சாலையாக உள்ளது.
ஆனால் தமிழக எல்லையான ஜீரோ பாயிண்ட் முதல் பூண்டி வரை 25 கிலோ மீட்டர் தூரத்துக்கு சவுடு மண் சாலையாக உள்ளது. ஆந்திராவில் உள்ளது போல் ஜீரோ பாயின்ட் முதல் பூண்டி ஏரி வரை தார் சாலை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story