டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வை 72,750 பேர் எழுதினர்
நெல்லை மாவட்டத்தில் நேற்று நடந்த டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வை 72,750 பேர் எழுதினார்கள். 15 சதவீதம் பேர் தேர்வு எழுத வரவில்லை.
நெல்லை,
தமிழக அரசு பணிக்கான டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வு நேற்று நடைபெற்றது. நெல்லை மாவட்டத்தில் நெல்லை, பாளையங்கோட்டை, ஆலங்குளம், அம்பை, நாங்குநேரி, ராதாபுரம், சங்கரன்கோவில், செங்கோட்டை, சிவகிரி, தென்காசி, வள்ளியூர், வீரகேரளம்புதூர், சேரன்மாதேவி, கடையநல்லூர், மானூர், திருவேங்கடம் ஆகிய பகுதிகளில் 283 கல்வி நிலையங்களில் இந்த தேர்வு நடைபெற்றது.
நெல்லை மாவட்டத்தில் மொத்தம் 85 ஆயிரத்து 509 பேர் தேர்வு எழுதுவதற்கு அனுமதி வழங்கப்பட்டு இருந்தது. இவர்களில் 72 ஆயிரத்து 750 பேர் கலந்து கொண்டு தேர்வு எழுதினர். 12 ஆயிரத்து 759 பேர் தேர்வு எழுத வரவில்லை. அதாவது 15 சதவீதம் பேர் தேர்வு எழுதவில்லை.
தேர்வு கூடங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. தேர்வு கூடத்துக்குள் பேனா தவிர செல்போன், புத்தகம், துண்டு சீட்டுகள் உள்ளிட்ட எந்த பொருட்களையும் கொண்டு செல்ல அனுமதிக்கவில்லை.
தேர்வு பணியை நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பா பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதுதவிர உதவி கலெக்டர் நிலையில் 24 பறக்கும் படை அலுவலர்களும், தாசில்தார், துணை தாசில்தார் நிலையில் 64 சுற்றுக்குழு அலுவலர்களும், உதவியாளர் நிலையில் 316 ஆய்வுப்பணி அலுவலர்களும் தேர்வு பணியை மேற்கொண்டனர். மேலும் தேர்வு மையங்களில் வீடியோ கேமராக்கள் மூலம் தேர்வு பணிகள் கண்காணிக்கப்பட்டது.
நெல்லை அருகே உள்ள ஒரு கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த ஒரு தேர்வு மையத்தில் தேர்வு எழுதுவதற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டவர்கள் காலை 8 மணி முதல் வந்து காத்திருந்தனர். ஆனால் தேர்வு தொடங்குவதற்காக 10 மணி வரை தேர்வுக்கூட அறைகளின் கதவுகள் திறக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இதுபற்றி வெளியே காத்திருந்த தேர்வு எழுதுவோரின் உறவினர்கள் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக அறைக்கதவுகள் திறக்கப்பட்டு ½ மணி நேரம் தாமதமாக தேர்வு தொடங்கியதாக தெரிகிறது. இதுகுறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆனால் கல்லூரி நிர்வாகம், குறிப்பிட்ட நேரத்தில் தேர்வு தொடங்கப்பட்டது, தாமதம் ஏற்படவில்லை என்று மறுத்துள்ளது.
Related Tags :
Next Story