தூத்துக்குடியில் வாக்காளர் பட்டியலில் பெயர் சரிபார்ப்பதற்கான புதிய செயலி - கலெக்டர் சந்தீப் நந்தூரி தொடங்கி வைத்தார்
தூத்துக்குடியில் வாக்காளர் பட்டியலில் பெயர் சரிபார்ப்பதற்கான புதிய செயலியை, மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி நேற்று காலை தொடங்கி வைத்தார்.
தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர், முகவரி உள்ளிட்ட விவரங்களை வாக்காளர்களே சரிபார்க்கும் வகையில் தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியல் சரிபார்க்கும் செயலியை வெளியிட்டு உள்ளது. அதன் தொடக்க நிகழ்ச்சி தூத்துக்குடியில் நேற்று காலை நடந்தது.
மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி தலைமை தாங்கி புதிய செயலியை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் கூறியதாவது:-
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி தூத்துக்குடி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சரிபார்க்கும் பணிகள் நேற்று முதல் வருகிற 30-ந் தேதி வரை நடக்கிறது. இதில் ஒவ்வொரு வாக்காளரும், வாக்காளர் பட்டியலில் உள்ள தங்களது பெயர், வயது பாலினம், பிறந்தநாள், கணவர் அல்லது தந்தை பெயர், புகைப்படம் ஆகியவற்றில் உள்ள பிழைகள் ஏதேனும் இருந்தால், வாக்காளர்களே www.NSPV.in என்ற இணையதள முகவரியில் பதிவு செய்யலாம்.
மேலும் வாக்காளர் உதவி மையம் என்ற ஆண்ட்ராய்டு செயலி மூலம் வாக்காளர்கள், வாக்காளர் பட்டியலில் உள்ள பிழைகளை செல்போன் மூலமாகவும் பதிவு செய்யலாம். மேலும் 1950 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண் மூலமாகவும் தேவையான விவரங்களை பெற்றுக் கொள்ளலாம்.
மாவட்ட கலெக்டர் அலுவலகம், தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகம், அனைத்து தாலுகாக்களில் உள்ள இ-சேவை மையங்களில் நேற்று முதல் ஒரு மாத காலத்துக்கு மேற்கொள்ளலாம். இதுதொடர்பாக பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் நடத்தப்பட உள்ளன. ஆகையால் வாக்காளர்கள் இந்த ஒரு மாத காலத்துக்குள் வாக்காளர் பட்டியலில் உள்ள பிழைகளை திருத்தம் செய்து செம்மையான வாக்காளர் பட்டியல் வெளியிட உறுதுணையாக இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் தேர்தல் பிரிவு தாசில்தார் நம்பிராஜன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story