விநாயகர் சதுர்த்தியையொட்டி, கோவையில் பூஜை பொருட்கள் விற்பனை மும்முரம்


விநாயகர் சதுர்த்தியையொட்டி, கோவையில் பூஜை பொருட்கள் விற்பனை மும்முரம்
x
தினத்தந்தி 2 Sept 2019 4:15 AM IST (Updated: 2 Sept 2019 2:47 AM IST)
t-max-icont-min-icon

விநாயகர் சதுர்த்தியையொட்டி கோவையில் பூஜை பொருட்கள் விற்பனை மும்முரமாக நடைபெற்றது.

கோவை,

விநாயக பெருமான் அவதரித்த நாளையே நாம் விநாயகர் சதுர்த்தியாக கொண்டாடுகிறோம். விநாயகர் சதுர்த்தி விழா இன்று (திங்கட்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி விநாயகர் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெறும். மேலும், பல்வேறு அமைப்புகள் சார்பில் பொது இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்படும்.

அதன் பின்னர் நீர் நிலைகளில் விசர்ஜனம் செய்யப்படுகிறது. விநாயகர் சதுர்த்தி அன்று கோவில்களில் மட்டுமின்றி வீடுகளிலும் சிறிய அளவிலான விநாயகர் சிலையை வைத்து பொதுமக்கள் வழிபாடு செய்வார்கள். அருகம்புல் மற்றும் எருக்கம்பூ மாலை அணிவித்து பிரார்த்தனை செய்வார்கள்.

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோவை பூ மார்க்கெட்டில் பூக்கள் மற்றும் பூஜை பொருட்கள் வாங்க மக்கள் கூட்டம் அலைமோதியது. வீடுகளில் வைக்க சிறிய அளவிலான விநாயகர் சிலைகளை பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கி சென்றனர். மேலும் பூமார்க்கெட்டில் விநாயகருக்கு விருப்பமான எருக்கம்பூ, அருகம்புல் மாலைகளும் விற்பனைக்கு வந்துள்ளது.

மேலும் பல்வேறு பூக்களை கொண்டு தயாரிக்கப்பட்ட மாலைகளின் விற்பனையும் சூடுபிடித்தது. இதுதவிர விநாயகருக்கு பிடித்த நாவல்பழம், விளாம்பழம், கரும்புத்துண்டு, அவல், பொரி, கடலை, சுண்டலுக்காக பயன்படும் கொண்டக்கடலை, தேங்காய், வாழைப்பழம், உள்ளிட்ட பல்வேறு வகையான பழங்கள் மற்றும் பூஜைக்கு தேவையான அனைத்து பொருட்களின் விற்பனை மும்முரமாக நடைபெற்றது.

கோவை பூமார்க்கெட்டுக்கு திண்டுக்கல், நிலக்கோட்டை, சேலம், நீலகிரி, பொள்ளாச்சி, தொண்டாமுத்தூர் போன்ற பகுதிகளில் இருந்து விற்பனைக்காக பூக்கள் கொண்டு வரப்பட்டு இருந்தன.

விநாயகர் சதுர்த்தியையொட்டி கோவை பூமார்க்கெட்டுக்கு செண்டு மல்லி, மல்லிகை, முல்லை, ஜாதி, சம்பங்கி, அரளி, பட்டன் ரோஜா, ஊட்டி ரோஜா உள்ளிட்ட மலர்கள் அதிக அளவில் விற்பனைக்கு வந்து குவிந்தன. நேற்று பூக்கள் வரத்து அதிகரித்து இருந்தது. தேவை அதிகளவு இருந்ததால் அதன் விலை கடுமையாக உயாந்து காணப்பட்டது.

இதுகுறித்து கோவை பூமார்க்கெட் வியாபாரிகள் சங்க செயற்குழு தலைவர் ரவிச்சந்திரன் கூறியதாவது:-

கோவை பூமார்க்கெட்டில் கடந்த வாரம் ஒரு கிலோ ரூ.10-க்கு விற்பனையான செண்டு மல்லி தற்போது ரூ.40-க்கு விற்பனை ஆனது. இதேபோல் ரூ.300 முதல் ரூ.400 வரை விற்பனையான மல்லிகை ரூ.1,000-க்கு விற்பனையானது.

முல்லைப்பூ ரூ.200-ல் இருந்து ரூ.800-க்கும், ஜாதிப்பூ ரூ.250-ல் இருந்து ரூ.500-க்கும், அரளி பூ ரூ.80-ல் இருந்து ரூ.160- ஆகவும், ரூ.100-க்கு விற்ற செவ்வந்தி ரூ.250-க்கும் விலை அதிகரித்து விற்பனை செய்யப்பட்டது. பூக்களின் விலை நாளை (இன்று) மேலும் உயர வாய்ப்பு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story