குரூப்-4 தேர்வு: நீலகிரி மாவட்டத்தில் 5,952 பேர் எழுதினர்


குரூப்-4 தேர்வு: நீலகிரி மாவட்டத்தில் 5,952 பேர் எழுதினர்
x
தினத்தந்தி 2 Sept 2019 4:15 AM IST (Updated: 2 Sept 2019 2:47 AM IST)
t-max-icont-min-icon

நீலகிரி மாவட்டத்தில் நேற்று டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வை 5,952 பேர் எழுதினர்.

ஊட்டி,

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) மூலம் நடத்தப்படும் குரூப்-4 பணியிடத்துக்கான எழுத்துத் தேர்வு நேற்று தமிழகம் முழுவதும் நடைபெற்றது. நீலகிரி மாவட்டத்தில் குரூப்-4 தேர்வுக்காக ஊட்டி தாலுகாவில் 6 தேர்வு மையங்கள், குன்னூர் தாலுகாவில் 5, கூடலூர் தாலுகாவில் 6, கோத்தகிரி தாலுகாவில் 3, குந்தா தாலுகாவில் 1, பந்தலூர் தாலுகாவில் 3 என மொத்தம் 24 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. இந்த தேர்வு எழுத நீலகிரியில் மொத்தம் 7 ஆயிரத்து 341 பேர் விண்ணப்பித்து இருந்தனர். அந்தந்த தேர்வு மையங்களுக்கு தேர்வர்கள் காலையில் வருகை தந்தனர்.

தேர்வு காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெற்றது. தேர்வு மையங்களில் தேர்வர்களை தவிர மற்றவர்கள் அனுமதிக்கப்பட வில்லை. ஊட்டி பெத்லகேம் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்த தேர்வை நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா பார்வையிட்டார். தேர்வையொட்டி 7 பறக்கும் படை அலுவலர்கள், தேர்வு மையங்களுக்கு வினாத்தாள் மற்றும் விடைத்தாள்களை கொண்டு செல்ல 7 மொபைல் யூனிட்டுகள், மையங்களில் தேர்வினை கண்காணிக்க 27 முதன்மை கண்காணிப்பாளர்கள் மற்றும் 27 மேற்பார்வை அலுவலர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

ஒவ்வொரு தேர்வர்களுக்கும் அவர்களது புகைப்படம் மற்றும் கையொப்பம் இடம் பெற்ற விடைத்தாள்கள் வழங்கப்பட்டன. நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி தாலுகாவில் 2 ஆயிரத்து 120 பேரும், குன்னூர் தாலுகாவில் ஆயிரத்து 125பேரும், கூடலூர் தாலுகாவில் ஆயிரத்து 226 பேரும், கோத்தகிரி தாலுகாவில் 680 பேரும், குந்தா தாலுகாவில் 166 பேரும், பந்தலூர் தாலுகாவில் 635 பேரும் என மொத்தம் 5 ஆயிரத்து 952 பேரும் தேர்வு எழுதினார்கள். இது 81 சதவீதம் ஆகும். தேர்வுக்கு விண்ணப்பித்த ஆயிரத்து 389 பேரும் தேர்வு எழுத வரவில்லை.

Next Story