அரசு பள்ளிகளை மூடினால் மாணவ-மாணவிகளுக்கு எப்படி இலவச கல்வி கிடைக்கும்? ஜி.ராமகிருஷ்ணன் கேள்வி
அரசு பள்ளிகளை மூடினால் மாணவ-மாணவிகளுக்கு இலவச கல்வி எப்படி கிடைக்கும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவரும், அரசியல் தலைமைக்குழு உறுப்பினருமான ஜி.ராமகிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார்.
வேடசந்தூர்,
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவரும், அரசியல் தலைமைக்குழு உறுப்பினருமான ஜி.ராமகிருஷ்ணன் திண்டுக்கல்லை அடுத்த வேடசந்தூருக்கு நேற்று வந்தார். பின்னர் அவர், நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மத்தியில் 2-வது முறையாக ஆட்சியை பிடித்த பா.ஜ.க. அரசின் தவறான கொள்கையால் இந்தியா, 70 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பொருளாதாரத்தில் மிகப்பெரிய சரிவை சந்தித்துள்ளது. ஆட்டோமொபைல் துறையில் 10 லட்சம் பேர் வேலை இழந்துள்ளனர். நாட்டின் ஒட்டுமொத்த தொழில் வளர்ச்சியும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு சமீபத்தில் அறிவித்த புதிய கல்வி கொள்கை எந்த வகையிலும் பள்ளி கல்வியையோ, உயர் கல்வியையோ மேம்படுத்தாது.
குறிப்பாக அரசு பள்ளிகளில் 20-க்கும் குறைவாக மாணவ-மாணவிகள் இருந்தால் அந்த பள்ளிகளை மூடவேண்டும் என்று மத்திய அரசு கூறுகிறது. அதே நேரத்தில், 3 முதல் 18 வயது வரை உள்ள மாணவ-மாணவிகளுக்கு கட்டாய இலவச கல்வி வழங்க வேண்டும் என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது. அரசு பள்ளிகளை மூடிவிட்டால் எவ்வாறு மாணவர்களுக்கு இலவச கல்வி தரமுடியும்.
எனவே புதிய கல்வி கொள்கையை மத்திய அரசு கைவிட வேண்டும். அதேபோல், மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கையால் நாட்டுக்கு ஏற்பட்ட பாதிப்பை சரிசெய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது மாநிலக்குழு உறுப்பினர் பாண்டி, திண்டுக்கல் மாவட்ட செயலாளர் சச்சிதானந்தம் உள்பட பலர் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story