மாவட்டத்தில் குரூப்-4 தேர்வை 41 ஆயிரத்து 861 பேர் எழுதினர்
நாமக்கல் மாவட்டத்தில் நேற்று குரூப்-4 தேர்வை 41 ஆயிரத்து 861 பேர் எழுதினர்.
நாமக்கல்,
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் குரூப்-4-ல் அடங்கிய பல்வேறு பதவிகளுக்கான போட்டித் தேர்வு நேற்று நாமக்கல் மாவட்டத்தில் 165 மையங்களில் நடைபெற்றது. நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தேர்வு மையத்தை மாவட்ட கலெக்டர் ஆசியா மரியம் மற்றும் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையக்குழு உறுப்பினர் பாலுசாமி ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
இதைத்தொடர்ந்து கலெக்டர் ஆசியா மரியம் கூறியதாவது:- நாமக்கல் மாவட்டத்தில் குரூப்-4 தேர்வு 165 மையங்களில் நடைபெற்றது. இந்த தேர்வை எழுத மொத்தம் 48 ஆயிரத்து 850 பேர் விண்ணப்பம் செய்திருந்தனர். இவர்களில் 6 ஆயிரத்து 989 பேர் தேர்வு எழுத வரவில்லை. 41 ஆயிரத்து 861 பேர் தேர்வினை எழுதினர்.
இந்த தேர்வில் முறைகேடுகள் நடக்காமல் இருக்க 165 முதன்மை கண்காணிப்பாளர்களும், 165 ஆய்வு அலுவலர்களும் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர். மேலும் துணை கலெக்டர், துணை இயக்குனர் மற்றும் உதவி இயக்குனர் நிலையில் 15 பறக்கும் படை அலுவலர்களும், துணை தாசில்தார் தலைமையில் 35 நடமாடும் குழுவினர்களும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
தேர்வு மையத்திற்குள், கைப்பை, புத்தகங்கள், செல்போன், கால்குலேட்டர், மின்னணு கைக்கடிகாரங்கள் உள்ளிட்ட பொருட்கள் எதையும் கொண்டு செல்ல அனுமதி இல்லை.
இவ்வாறு அவர் கூறினார். இந்த ஆய்வின் போது நாமக்கல் தாசில்தார் பச்சைமுத்து உள்பட அரசுத்துறை அலுவலர்கள் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story