கள்ளக்காதல் விவகாரத்தில் பெண்ணை கொல்ல முயன்ற ரியல் எஸ்டேட் அதிபர் கைது
சேலத்தில் கள்ளக்காதல் விவகாரத்தில் பெண்ணை கொல்ல முயன்ற ரியல் எஸ்டேட் அதிபரை போலீசார் கைது செய்தனர். இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
சேலம்,
சேலம் அழகாபுரம் தாமரைநகர் பகுதியை சேர்ந்தவர் சிவலிங்கம். இவரது மனைவி உமா மகேஸ்வரி (வயது 30). இவர்களுக்கு 8 வயதில் மகள் உள்ளாள். இந்தநிலையில், வேறு சில ஆண்களுடன் உமா மகேஸ்வரிக்கு பழக்கம் ஏற்பட்டு செல்போனில் அடிக்கடி பேசி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. பின்னர் மனைவியை விட்டு சிவலிங்கம் பிரிந்து தனியாக வசித்து வருகிறார். மகளுடன் தனியாக வசித்து வந்த உமா மகேஸ்வரிக்கு, பேஸ்புக் மூலம் அழகாபுரம் இ.பி.காலனியை சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் பூபதி (33) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. ஆனால் கணவரை பிரிந்து தனியாக வசித்து வந்ததால் அதை சாதகமாக பயன்படுத்தி கொண்ட பூபதி, அவருடன் நெருங்கி பழகி வந்ததாக கூறப்படுகிறது.
இதனிடையே, நேற்று முன்தினம் உமா மகேஸ்வரியின் வீட்டிற்கு பூபதி சென்றார். அப்போது, வேறு ஆண்களுடன் பேசுவதை அறிந்து அவர் கண்டித்துள்ளார். இதனால் அவர்கள் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது, ஆத்திரம் அடைந்த பூபதி, உமா மகேஸ்வரியை தாக்கி செல்போன் சார்ஜர் வயரை எடுத்து கழுத்தில் இறுக்கி கொலை செய்ய முயன்றதாக தெரிகிறது. பின்னர் அவரிடம் இருந்து தப்பிய உமா மகேஸ்வரி, ஒரு அறைக்குள் சென்று கதவை பூட்டிக்கொண்டார். இது தொடர்பாக செல்போன் மூலம் அழகாபுரம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.
அதன்பேரில் இன்ஸ்பெக்டர் கந்தவேல் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உமா மகேஸ்வரியை மீட்டு விசாரித்தனர். மேலும், அங்கிருந்த பூபதியை பிடித்து கைது செய்தனர். அவர் மீது கொலை செய்ய முயற்சி, அடித்து துன்புறுத்தியது உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
பின்னர் அவரை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.
Related Tags :
Next Story