ரூ.3 கோடி கேட்டு மாணவரை கடத்திய சம்பவம் “சொகுசு வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு கடத்தினோம்”
காட்பாடி அருகே ரூ.3 கோடி கேட்டு மாணவர் கடத்தப்பட்ட வழக்கில் சக மாணவர்கள் 4 பேர் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர். சொகுசு வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு மாணவரை கடத்தியதாக அவர்கள் வாக்குமூலம் கொடுத்துள்ளனர்.
காட்பாடி,
வேலூர் சத்துவாச்சாரி வேளாளர்தெருவை சேர்ந்தவர் கென்னடி, வெல்டிங் பட்டறை உரிமையாளர். இவருடைய மகன் கோகுல் (வயது 18) காட்பாடி அருகே உள்ள தனியார் தொழில்நுட்ப கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த வெள்ளிக்கிழமை காலை வழக்கம்போல் கல்லூரிக்கு சென்ற கோகுல் மாலையில் வீடு திரும்பவில்லை.
இந்த நிலையில் இரவு 8 மணியளவில் கோகுலின் செல்போன் மூலம் மர்மநபர்கள் அவருடைய தாயார் மைதிலியை தொடர்பு கொண்டு உங்கள் மகனை நாங்கள் கடத்தி வைத்திருக்கிறோம். ரூ.3 கோடி கொடுத்தால்தான் அவனை விடுவிப்போம் என்று கூறினர். இதனால் அதிர்ச்சி அடைந்த கோகுலின் பெற்றோர் அது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதைத்தொடர்ந்து மாவட்டம் முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டனர்.
மேலும் கோகுலின் செல்போன் எண் மூலம் போலீசார் துப்பு துலக்க தொடங்கினர். அப்போது வள்ளிமலை, மேல்பாடி பகுதிகளில் மர்மநபர்கள் சுற்றித்திரிவது தெரிய வந்தது. இதையடுத்து மர்மநபர்களை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. ரூ.3 கோடியை உடனடியாக வள்ளிமலை கோவில் அருகே கொண்டு வரும்படி மர்மநபர்கள் போனில் தெரிவித்தனர். அவ்வளவு பணம் இல்லை என்று கூறியதால், நீண்டநேரம் நடந்த பேச்சுவார்த்தையில் ரூ.5 லட்சமும், 50 பவுன் நகையும் தருவதாக முடிவானது. அவற்றை உடனடியாக கொண்டு வந்து தரும்படி கூறிய மர்மநபர்கள் போனை துண்டித்தனர்.
இதையடுத்து போலீசார் ‘டிராவல் பேக்’ ஒன்றில் பணம் இருப்பதுபோன்று பேப்பரை வைத்து மைதிலியிடம் கொடுத்து மர்மநபர்களிடம் கொடுக்கும்படி கூறினர். தொடர்ந்து அவர் ஒரு காரிலும், அவரை பின்தொடர்ந்து சிறிதுதூர இடைவெளியில் 3 கார்களில் தனிப்படையை சேர்ந்த துணை போலீஸ் சூப்பிரண்டுகள் ராதாகிருஷ்ணன், சங்கர், இன்ஸ்பெக்டர் நாகராஜன் மற்றும் போலீசாரும் சென்றனர்.
போலீசார் வருவதை அறிந்துகொண்ட மர்மநபர்கள் வள்ளிமலை கோவில் அருகே கோகுலை விட்டு விட்டு தப்பிச்சென்றுவிட்டனர். கோவில் அருகே தனியாக நின்று கொண்டிருந்த கோகுலை மீட்டனர். அவர் கொடுத்த தகவலின்பேரில் அவரை கடத்தியதாக 5 பேரை போலீசார் கைதுசெய்தனர்.
அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்களில் வாலாஜா தாலுகா மேல்குப்பம் கிராமத்தை சேர்ந்த சுந்தரமூர்த்தி மகன் டெல்லிபாபு (19), சத்துவாச்சாரி சி.எம்.சி. காலனியை சேர்ந்த ராமன் மகன் பாலுசாமுவேல் (19) மற்றும் 17 வயதுடைய 2 பேர் என்பதும் இவர்கள் கோகுலுடன் படிக்கும் சக மாணவர்கள் என்பதும் தெரியவந்தது. மேலும் இவர்களுக்கு உடந்தையாக செயல்பட்ட திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியை அடுத்த ஆர்.கே.பேட்டையை சேர்ந்த 17 வயது வாலிபரும் கைதாகியுள்ளார். கைது செய்யப்பட்டவர்கள் போலீசில் கொடுத்துள்ள வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-
கோகுலை அவருடைய தந்தை தினமும் காரில் கொண்டுவந்து விடுவார். மாலையில் கல்லூரி முடிந்ததும் கோகுல், யாரிடமாவது லிப்ட் கேட்டு அவர்களுடன் மோட்டார்சைக்கிளில் செல்வான். தினமும் அதிக அளவில் பணம் கொண்டுவந்து செலவுசெய்வான்.
வசதியான வீட்டு பையன் என்பதால் அவனைகடத்தி பணம்பறித்தால் சொகுசாக வாழலாம் என்று நினைத்தோம். அதற்காக அவனை கடத்துவதற்காக எங்களுக்கு தெரிந்தவரை கல்லூரிக்கு வெளியே மோட்டார்சைக்கிளில் நிற்கவைத்தோம். கல்லூரி முடிந்து வெளியேவந்த கோகுல் அவர் மோட்டார்சைக்கிளில் லிப்ட் கேட்டு சென்றான்.
அவர் கோகுலை கடத்திவந்து எங்களிடம் ஒப்படைத்தார். பணம் கிடைத்தவுடன் அவர்களுக்கு ஒருதொகை தருவதாக கூறியிருந்தோம். மேலும் கிடைக்கும் பணத்தில் ஏழைகளுக்கு உதவவும் திட்டமிட்டிருந்தோம் என்று கூறி உள்ளதாக போலீசார் தெரிவித்தனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. இந்த நிலையில் 17 வயதுடைய சகமாணவர்கள் 2 பேர் மற்றும் உடந்தையாக இருந்த ஆர்.கே.பேட்டையை சேர்ந்தவர் ஆகியோர் செங்கல்பட்டு சீர்திருத்தப்பள்ளியில் அடைக்கப்பட்டனர். டெல்லிபாபு மற்றும் பாலுசாமுவேல் ஆகியோர் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டனர்.
Related Tags :
Next Story