பர்கூர் அருகே துணிகரம்: ஓய்வு பெற்ற முதன்மை கல்வி அதிகாரி வீட்டில் ரூ.3 லட்சம் நகைகள் திருட்டு


பர்கூர் அருகே துணிகரம்:  ஓய்வு பெற்ற முதன்மை கல்வி அதிகாரி வீட்டில் ரூ.3 லட்சம் நகைகள் திருட்டு
x
தினத்தந்தி 2 Sept 2019 3:45 AM IST (Updated: 2 Sept 2019 4:32 AM IST)
t-max-icont-min-icon

பர்கூர் அருகே ஓய்வு பெற்ற முதன்மை கல்வி அதிகாரி வீட்டில் ரூ.3 லட்சம் மதிப்பிலான நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.

பர்கூர், 

கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அருகே உள்ள பி.ஆர்.ஜி. மாதேப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் முனுசாமி (வயது 62). ஓய்வு பெற்ற மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி. இவர் நேற்று முன்தினம் காலை 11 மணிக்கு தனது வீட்டை பூட்டி விட்டு கிருஷ்ணகிரிக்கு சென்றார். பின்னர் இரவு 10 மணிக்கு வீட்டிற்கு வந்து பார்த்தார்.

அப்போது, வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தார். வீட்டில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த ரூ.3 லட்சம் மதிப்பிலான 15 பவுன் நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.

இதுகுறித்து முனுசாமி கந்திகுப்பம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் கந்திகுப்பம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சங்கரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். ஓய்வு பெற்ற மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி வீட்டில் நகைகள் திருடப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story