கிருஷ்ணகிரி அரசு மகளிர் கலைக்கல்லூரிக்கு கின்னஸ் சாதனை விருது - கலெக்டர் பிரபாகர் வழங்கி பாராட்டு
கிருஷ்ணகிரி அரசு மகளிர் கலைக்கல்லூரிக்கு கின்னஸ் சாதனை விருதை மாவட்ட கலெக்டர் பிரபாகர் வழங்கி பாராட்டினார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி அரசு மகளிர் கலைக்கல்லூரியில் ஜே.சி.ஐ. கிருஷ்ணகிரி மேங்கோ டவுன் மற்றும் கல்லூரி இணைந்து கின்னஸ் சாதனை விருது பெற்றமைக்காக சான்றழிப்பு விழா கலெக்டர் பிரபாகர் தலைமையில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் தமிழ்த்துறைத் தலைவர் கீதா வரவேற்றார். முதல்வர் ஜெயந்தி சிறப்புரையாற்றினார்.
தொடர்ந்து கலெக்டர் பிரபாகர் விருது, சான்றிதழை கல்லூரிக்கு வழங்கி பேசியதாவது:- கடந்த நாடாளுமன்ற தேர்தலையொட்டி இந்த கல்லூரி வளாகத்தில் 9.4.2019 அன்று 100 சதவீதம் வாக்களிப்பதின் அவசியத்தை சமூகத்திற்கு உணர்த்தும் வகையில் இக்கல்லூரி முதல்வர், மற்றும் பேராசிரியர்களின் ஒருங்கிணைப்பில் மாணவிகள் இந்திய தேர்தல் ஆணைய குறியீட்டை மூவர்ண கொடி வர்ணத்தில் அணிவகுத்து நின்றனர்.
பின்பு இந்த நிகழ்ச்சி குறித்து ஜே.சி.ஐ. சார்பாக கின்னஸ் சாதனை விருதிற்கு அனுப்பி வைக்கப்பட்டது. அச்சாதனை உறுதி செய்யப்பட்டு அதற்கான சான்று கல்லூரிக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த சாதனை நிகழ்த்திய கல்லூரி முதல்வர், பேராசிரியர்கள் மற்றும் மாணவிகளுக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். இக்கல்லூரி மாணவிகள் மேலும் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தி கல்லூரிக்கு பெருமை சேர்த்திட வேண்டும். அதே போல் நல்ல கல்வி கற்று சிறந்த வேலை வாய்ப்புகளை பெற்று தங்களின் வாழ்க்கை சிறப்பாக அமைத்துக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
தொடர்ந்து கலெக்டர் பிரபாகர் பேசுகையில், செப்டம்பர் 1-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதியிலும் வீடு வீடாக வாக்காளர் பட்டியல் சரிசெய்யும் பணியில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மேற்கொள்கிறார்கள்.
எனவே, வாக்காளர்கள் தங்களுடைய புகைப்படம், பெயர் திருத்தம் மற்றும் முகவரி மாற்றம் உள்ளிட்ட திருத்தங்களை செய்துகொள்ளலாம். மாணவிகள் இந்த பணிகள் குறித்து பொதுமக்களிடம் எடுத்துரைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் ஜே.சி.ஐ. தன்னம்பிக்கை பேச்சாளர் நந்தகுமார், ஜே.சி.ஐ. தலைவர் மஞ்சுநாத், ஜே.சி.ஐ. மண்டல இயக்குனர் அசோக்குமார், ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். முடிவில் ஆங்கிலத்துறைத் தலைவர் கல்பனா நன்றி கூறினார்.
Related Tags :
Next Story