டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வு: சேலம் மாவட்டத்தில் 78,301 பேர் எழுதினர்
சேலம் மாவட்டத்தில் டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வை 78,301 பேர் எழுதினர்.
சேலம்,
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) மூலம் கிராம நிர்வாக அலுவலர்கள், இளநிலை உதவியாளர், வரி வசூலிப்பர், தட்டச்சர், நில அளவர், சுருக்கெழுத்து தட்டச்சர் உள்பட மொத்தம் காலியாக உள்ள 6 ஆயிரத்து 491 பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப்-4 தேர்வு தமிழகம் முழுவதும் நேற்று நடைபெற்றது.
அதன்படி சேலம் மாவட்டத்தில் 235 மையங்களில் 314 தேர்வு கூடங்களில் மொத்தம் 91 ஆயிரத்து 783 பேர் தேர்வு எழுத விண்ணப்பித்து இருந்தனர். ஆனால் 78 ஆயிரத்து 301 பேர் மட்டுமே தேர்வு எழுதினர். 13 ஆயிரத்து 482 பேர் தேர்வு எழுத வரவில்லை. காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை தேர்வு நடந்தது. ஆனால் காலை 8 மணிக்கே தேர்வர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்த மையங்களுக்கு வருகை புரிந்தனர். சில பெண்கள் கைக்குழந்தைகளுடன் தேர்வு எழுத வந்திருந்தனர். அவர்கள் தேர்வு எழுத சென்ற நேரத்தில் உடன் வந்திருந்த பெற்றோரிடம் தங்களது குழந்தைகளை ஒப்படைத்து சென்றதை காணமுடிந்தது.
தேர்வு மையத்திற்குள் கைப்பை, புத்தகங்கள், செல்போன், கால்குலேட்டர், மின்னணு கைகடிகாரங்கள் உள்ளிட்ட மின்சாதன பொருட்கள் எடுத்து செல்ல தடை விதிக்கப்பட்டது. தேர்வு முழுவதும் வீடியோ கேமரா மூலம் பதிவு செய்து கண்காணிக்கப்பட்டது. மேலும், வருவாய்த்துறை அலுவலர்கள், பறக்கும்படை அலுவலர்கள் உள்ளிட்ட குழுக்கள் அமைக்கப்பட்டு தேர்வில் ஏதேனும் முறைகேடு நடக்கிறதா? என்பது குறித்து கண்காணிக்கப்பட்டது.
சேலம் சின்னதிருப்பதி ஜெய்ராம் கல்லூரியில் நடந்த மையத்தில் குரூப்-4 தேர்வை மாவட்ட கலெக்டர் ராமன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். சேலம் அரசு கலைக்கல்லூரி, மணக்காடு காமராஜர் மகளிர் மேல்நிலைப்பள்ளி, சேலம் கோகுலநாத இந்து மகாஜன மேல்நிலைப்பள்ளி உள்பட மாவட்டம் முழுவதும் அமைக்கப்பட்டிருந்த தேர்வு மையங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். மேலும், அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் தேர்வர்களின் வசதிக்காக தேர்வு மையங்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.
Related Tags :
Next Story