பெண்களிடம் நகை பறிப்பில் ஈடுபட்ட 2 கொள்ளையர்களுக்கு விபத்தில் கால் முறிவு


பெண்களிடம் நகை பறிப்பில் ஈடுபட்ட 2 கொள்ளையர்களுக்கு விபத்தில் கால் முறிவு
x
தினத்தந்தி 1 Sep 2019 10:30 PM GMT (Updated: 1 Sep 2019 11:02 PM GMT)

சேலம் மாவட்டத்தில் பெண்களிடம் நகை பறிப்பில் ஈடுபட்ட 2 கொள்ளையர்களுக்கு விபத்தில் கால் முறிவு ஏற்பட்டது.

எடப்பாடி,

சேலம் மாவட்டம் எடப்பாடி கவுண்டம்பட்டி செல்லியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் தங்கவேல். இவருடைய மனைவி உண்ணாமலை அம்மாள் (வயது 65). இவர் தினமும் காலை நடைபயிற்சி செல்வது வழக்கம். இதேபோன்று கடந்த ஜூலை மாதம் 13-ந்தேதி சின்னமாரியம்மன் கோவில் அருகில் உண்ணாமலை அம்மாள் நடைபயிற்சி சென்றார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் மூதாட்டி கழுத்தில் இருந்த 8 பவுன் நகையை பறித்து கொண்டு மின்னல் வேகத்தில் சென்று விட்டனர். இதுகுறித்த புகாரின் பேரில் கொள்ளையர்களை பிடிக்க சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தீபா கனிக்கர் தனிப்படை அமைத்து உத்தரவிட்டார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் செந்தில், சசிகுமார் ஆகியோர் தலைமையிலான தனிப்படை போலீசார் எடப்பாடி பகுதியில் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டு வந்தனர்.

இதனிடையே எடப்பாடியில் சங்ககிரி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பாலத்தின் மீது ஒரு மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானது. இதில் மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேருக்கும் கால் முறிவு ஏற்பட்டது. அந்த வழியாக சென்றவர்கள், 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக எடப்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில் மற்றும் போலீசார் ஆஸ்பத்திரிக்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் சென்னை திரு.வி.க. நகரை சேர்ந்த கார்த்திக்(32), இளம்பிள்ளை அருகே உள்ள தப்பக்குட்டையை சேர்ந்த மாரிமுத்து(39) என்பதும் தெரியவந்தது.

அவர்களிடம் தொடர்ந்து நடத்திய விசாரணையில் கார்த்திக் சென்னையில் பல்வேறு இடங்களில் வழிப்பறியில் ஈடுபட்டு வந்ததும், மாரிமுத்து ஒரு வழக்கில் சென்னை சிறையில் இருந்த போது கார்த்திக்குடன் பழக்கம் ஏற்பட்டதும், வெளியே வந்த பிறகு இவர்கள் 2 பேரும், சென்னையை சேர்ந்த சரவணன் என்பவருடன் சேர்ந்து சேலம் மாவட்டத்தில் தாரமங்கலம், எடப்பாடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வழிப்பறி, பெண்களிடம் நகை பறிப்பு உள்ளிட்ட சம்பவங்களில் ஈடுபட்டதும் தெரியவந்தது. மேலும் கொள்ளையர்களான இவர்கள் 3 பேரும் தான் உண்ணாமலை அம்மாளிடமும் நகையை பறித்துள்ளனர். இதில் தொடர்புடைய சரவணனை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Next Story