ஓடும் பஸ்சில் டிக்கெட் எடுக்காமல் பயணம் செய் போலீஸ்காரருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட கண்டக்டர் திடீர் சாவு
நெய்வேலி அருகே ஓடும் பஸ்சில் டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்த போலீஸ்காரருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட கண்டக்டர் திடீரென உயிரிழந்தார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மந்தாரக்குப்பம்,
கடலூர் மஞ்சக்குப்பம் முத்தையா நகரை சேர்ந்தவர் கோபிநாத் (வயது 55). இவர் அரசு பஸ்சில் கண்டக்டராக வேலை பார்த்து வந்தார். நேற்று காலை திருச்சியில் இருந்து கடலூருக்கு வந்த பஸ்சில் பணியில் இருந்தார். அப்போது விருத்தாசலத்தில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு, டிக்கெட் கொடுத்துக்கொண்டிருந்தார்.
அப்போது ஒருவர் மட்டும், தான் காவல் துறையில் பணிபுரிவதாகவும், டிக்கெட் எடுக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளார். ஆனால் கோபிநாத், அதற்கு உரிய அடையாள அட்டையை கேட்டுள்ளார். அதற்கு அவர் உங்களிடம் காண்பிக்க முடியாது என்று கூறி மறுத்துள்ளார். இதனால் அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இந்த நிலையில் பஸ் நெய்வேலி அருகே உள்ள ஊமங்கலம் வந்த போது, திடீரென கோபிநாத் நெஞ்சை பிடித்தபடி மயங்கி விழுந்தார். இதை பார்த்த மற்ற பயணிகள் அதிர்ச்சியடைந்தனர். உடன் டிரைவர் பஸ்சை வேகமாக ஓட்டினார். மந்தாரக்குப்பம் பஸ் நிலையத்திலும் பஸ்சை நிறுத்தாமல், பெரியாகுறிச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனை முன்பு நிறுத்தினார். இதையடுத்து பயணிகள் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு கோபிநாத்தை பரிசோதனை செய்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
பின்னர் போலீஸ்காரர் என்று கூறி கண்டக்டரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டவரை பயணிகள் பிடித்து மந்தாரக்குப்பம் போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர் குறிஞ்சிப்பாடி சமட்டிக்குப்பத்தை சேர்ந்த பழனிவேல் என்பதும், திட்டக்குடி போலீஸ் நிலையத்தில் தலைமை காவலராக அவர் பணிபுரிந்து வருவதும் தெரியவந்தது. தற்போது கடலூர் முதுநகரில் வசித்து வருகிறார்.
இதற்கிடையே கோபிநாத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஓடும் பஸ்சில் மயங்கி விழுந்த கண்டக்டர் திடீரென உயிரிழந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story