சிறுபாக்கம் அருகே பரபரப்பு, அடுத்தடுத்து 3 வீடுகளில் நகை-பணம் திருட்டு - மர்ம மனிதர்களுக்கு போலீஸ் வலைவீச்சு


சிறுபாக்கம் அருகே பரபரப்பு, அடுத்தடுத்து 3 வீடுகளில் நகை-பணம் திருட்டு - மர்ம மனிதர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
x
தினத்தந்தி 3 Sept 2019 4:00 AM IST (Updated: 2 Sept 2019 8:08 PM IST)
t-max-icont-min-icon

சிறுபாக்கம் அருகே அடுத்தடுத்து 3 வீடுகளில் நகை, பணத்தை திருடி சென்ற மர்ம மனிதர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

சிறுபாக்கம்,

சிறுபாக்கம் அடுத்த அ.களத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் தர்மதுரை மனைவி எழிலரசி. இவர் நேற்று முன்தினம் அதே கிராமத்தில் வடக்குதெருவில் உள்ள தனது தாய் வீட்டுக்கு சென்றிருந்தார். இரவு அங்கு அயர்ந்து தூங்கி கொண்டிருந்த போது, வீட்டிற்குள் நுழைந்த மர்ம மனிதர்கள் அவர் கழுத்தில் அணிந்திருந்த 10 பவுன் தாலி செயினை பிடித்து இழுத்தனர். இதனால் தூக்கத்தில் இருந்து எழுந்த எழிலரசி திருடன், திருடன் என்று சத்தம்போட்டார். அதற்குள் மர்ம மனிதர்கள் நகையை பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

இதற்கிடையே அருகில் உள்ள வீடுகளில் வசிப்பவர்கள் அனைவரும் அங்கு திரண்டு வந்தனர். அப்போது அதே தெருவை சேர்ந்த விவசாயி கோவிந்தராசு(வயது 52) என்பவரும் எழுந்தார். அப்போது அவரது வீட்டு கதவு பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் அங்கிருந்த பீரோவை பார்த்தார்.

அதில் கதவு உடைக்கப்பட்டு பொருட்கள் அனைத்தும் சிதறி கிடந்தன. மேலும் பீரோவில் இருந்த ரூ.53 ஆயிரம், 200 கிராம் வெள்ளி பொருட்களை காணவில்லை. இதன் மூலம் வீட்டின் கதவு பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த மர்ம மனிதர்கள், வெள்ளி நகை, பணத்தை திருடி சென்று இருப்பது தெரியவந்தது. இதே போல் அதே பகுதியில் வசித்து வரும் லட்சுமணன் என்பவரது வீட்டிற்குள் புகுந்து பீரோவில் இருந்த 50 கிராம் வெள்ளி பொருட்கள், ரூ.200-ஐ மர்ம மனிதர்கள் திருடி சென்றிருந்தனர்.

அடுத்தடுத்த வீடுகளில் மர்ம மனிதர்கள் கைவரிசை காட்டி சென்று இருப்பது குறித்து சிறுபாக்கம் போலீசாருக்கு அவர்கள் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு)ஸ்ரீபிரியா, சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

மேலும் மோப்பநாய் அர்ஜூன் வரவழைக்கப்பட்டது. திருட்டு நடந்த இடத்தில் இருந்து மோப்பம் பிடித்து சிறிது தூரம் ஓடி நின்றது. கைரேகை நிபுணர்களும் சம்பவ இடத்திற்கு வந்து அங்கு பதிவாகி இருந்த கைரேகைகளை சேகரித்தனர்.

இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம மனிதர்களை வலைவீசி தேடி வருகின்றனர். ஒரே நாள் இரவில் அடுத்தடுத்து 3 வீடுகளில் நடந்த திருட்டு சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருப்பதுடன், கிராம மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story