விழுப்புரம் அருகே, கி.பி. 10-ம் நூற்றாண்டு அய்யனார் சிற்பம் கண்டெடுப்பு


விழுப்புரம் அருகே, கி.பி. 10-ம் நூற்றாண்டு அய்யனார் சிற்பம் கண்டெடுப்பு
x
தினத்தந்தி 3 Sept 2019 3:45 AM IST (Updated: 2 Sept 2019 8:49 PM IST)
t-max-icont-min-icon

விழுப்புரம் அருகே கி.பி. 10-ம் நூற்றாண்டை சேர்ந்த அய்யனார் சிற்பம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

விழுப்புரம்,

விழுப்புரம் அருகே தென்பெண்ணை ஆற்றின் தென் கரையில் அமைந்துள்ளது பேரங்கியூர் கிராமம். இவ்வூர் கல்வெட்டுகளில் பேரிங்கூர் என குறிக்கப்பட்டுள்ளது. இங்கு கி.பி. 10-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட திருமூலஸ்தானமுடையார் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் முதற்பராந்தக சோழன், கன்னர தேவன், முதலாம் ராஜராஜன், முதலாம் ராஜேந்திரன், முதலாம் குலோத்துங்கன் உள்ளிட்டோரின் கல்வெட்டுகள் மற்றும் அழகிய சிற்பங்கள் இடம் பெற்றுள்ளன.

இந்நிலையில் விழுப்புரம் பகுதியை சேர்ந்த வரலாற்று ஆய்வாளர் கோ.செங்குட்டுவன், வரலாற்று ஆர்வலர் திருவாமாத்தூர் சரவணக்குமார் ஆகியோர் பேரங்கியூர் தேர்முட்டித்தெருவில் அய்யனார் சிற்பத்தை கண்டெடுத்து, அதனை ஆய்வு செய்தனர். இதுபற்றி அவர்கள் கூறியதாவது:-

அய்யனார் வழிபாடு தமிழகத்தில் தொன்மைமிக்கது. குறிப்பாக விழுப்புரம் மாவட்டத்தில் இந்த வழிபாடு இன்றளவும் சிறந்து விளங்குகிறது. பேரங்கியூரில் உள்ள அய்யனார் சிற்பம் பலகைக்கல்லில் புடைப்புச் சிற்பமாக வடிக்கப்பட்டுள்ளது. அய்யனார் வலது காலை தொங்கவிட்டும் இடது காலை மடக்கியும் மகாராஜ லீலாசனத்தில் அமர்ந்து இருக்கிறார். அருகில் பொதுமக்களால் பொற்கலை என்றழைக்கப்படுபவர் கால்களை மடக்கி இடது கையை ஊன்றி நளினமாக அமர்ந்து இருக்கிறார்.

பொதுவாக அய்யனார் சிற்பங்கள் தனித்தோ அல்லது பூரணி, பொற்கலை இருவருடனோ சிற்பமாக வடிக்கப்பட்டு இருக்கும். ஆனால் பேரங்கியூரில் ஒருவருடன்தான் அய்யனார் காட்டப்பட்டு இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சிற்பத்தின் காலம் கி.பி. 10-ம் நூற்றாண்டாக இருக்கலாம் என கருதப்படுகிறது. இங்குள்ள திருமூலஸ்தானமுடையார் கோவிலும் இதே காலக்கட்டத்தில் கட்டப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story