திண்டுக்கல் குடைப்பாறைப்பட்டியில், தடையை மீறி பிரதிஷ்டை செய்த விநாயகர் சிலை பறிமுதல்
திண்டுக்கல் குடைப்பாறைப்பட்டியில் தடையை மீறி பிரதிஷ்டை செய்த விநாயகர் சிலையை போலீசார் பறிமுதல் செய்தனர். ஊர்வலமாக செல்ல முயன்ற இந்து முன்னணியினர் 40 பேர் கைது செய்யப்பட்டனர்.
திண்டுக்கல்,
விநாயகர் சதுர்த்தியையொட்டி, திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகள் நேற்று பிரதிஷ்டை செய்யப்பட்டன. இதற்காக வருவாய்த்துறை மற்றும் போலீசாரிடம் முறையாக அனுமதி பெறப்பட்டது. இந்த நிலையில் திண்டுக்கல் குடைப்பாறைப்பட்டி காளியம்மன் கோவிலில், விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்ய இந்து முன்னணி சார்பில் அனுமதி கேட்கப்பட்டது. ஆனால் சிலை வைக்க அனுமதி அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதையடுத்து இந்து முன்னணி மாவட்ட அமைப்பாளர் சங்கர்கணேஷ் தலைமையில் அந்த அமைப்பினர், தடையை மீறி அங்குள்ள காளியம்மன் கோவிலில் விநாயகர் சிலையை நேற்று பிரதிஷ்டை செய்தனர். பின்னர் சிலைக்கு சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. இதில் அந்த பகுதியை சேர்ந்த பக்தர்கள், இந்து முன்னணி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். பூஜை முடிந்ததும் பக்தர்களுக்கு சர்க்கரை பொங்கல், சுண்டல் பிரசாதமாக வழங்கப்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸ் துணை சூப்பிரண்டு மணிமாறன் மற்றும் திண்டுக்கல் தெற்கு போலீசார் அங்கு விரைந்தனர். பின்னர் அவர்கள், தடையை மீறி சிலையை பிரதிஷ்டை செய்யக்கூடாது என அறிவுறுத்தினர். ஆனால் அதனை ஏற்காத இந்து முன்னணியினர் சிலையை ஊர்வலமாக எடுத்துச்செல்ல முயன்றனர். இதையடுத்து அந்த சிலையை போலீசார் பறிமுதல் செய்தனர்.
மேலும் தடையை மீறி சிலை வைத்ததாக இந்து முன்னணியை சேர்ந்த 5 பெண்கள் உள்பட 40 பேரை போலீசார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர். பின்னர் மாலையில் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.
தடையை மீறி சிலை வைத்தது குறித்து இந்து முன்னணியினர் கூறும்போது, ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தியன்று குடைப்பாறைப்பட்டியில் பிரதிஷ்டை செய்யப்படும் சிலைகள், முக்கிய சாலைகள் வழியாக ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு கோட்டை குளத்தில் கரைக்கப்படும்.
ஆனால் அதேபகுதியில் உள்ள பிற மதத்தினரின் வழிபாட்டு தலத்தை கடந்து செல்லும் போது இசை கருவிகளை பயன்படுத்தாமல் செல்ல வேண்டும் என்று போலீசார் அறிவுறுத்துகின்றனர்.
அதனை ஏற்காதவர்களுக்கு சிலை வைக்க அனுமதி வழங்கப்படுவதில்லை. இதனாலேயே நாங்கள் தடையை மீறி சிலையை பிரதிஷ்டை செய்தோம். மேளதாளம் முழங்க விநாயகர் சிலையை ஊர்வலமாக கொண்டு செல்ல அனுமதி கிடைக்கும்வரை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றனர்.
Related Tags :
Next Story