பா.ஜ.க.வுக்கு எதிராக அனைவரும் ஒன்று சேர்ந்து போராட வேண்டும் - ஆர்.நல்லகண்ணு பேச்சு
பா.ஜ.க.வுக்கு எதிராக அனைவரும் ஒன்று சேர்ந்து போராட வேண்டும் என ஆர்.நல்லகண்ணு பேசினார்.
சிவகிரி,
நெல்லை மாவட்டம் சிவகிரிக்கு, இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவரும், தேசிய குழு உறுப்பினருமான ஆர்.நல்லகண்ணு நேற்று வருகை தந்தார். அவருக்கு தென்காசி- மதுரை தேசிய நெடுஞ்சாலையில் பழைய போலீஸ் நிலையம் அருகே கட்சியினர் வரவேற்பு அளித்தனர்.
பின்னர் தேவர் சிலை, அம்பேத்கர் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதைத் தொடர்ந்து சிவகிரி நகர கம்யூனிஸ்டு கட்சி அலுவலகம் முன்பு உள்ள கொடி கம்பத்தில் கட்சி கொடி ஏற்றினார். பின்னர் அங்குள்ள மண்டபத்தில் கட்சி உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நகர பொருளாளர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். முன்னாள் எம்.பி. லிங்கம், மாவட்ட துணை செயலாளர் இசக்கிதுரை, சிவகிரி நகர செயலாளர் குருசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட குழு உறுப்பினர் கதிரேசன் வரவேற்றார்.
நிகழ்ச்சியில் 420 பேருக்கு கட்சி உறுப்பினர் அட்டையை, நல்லகண்ணு வழங்கி பேசினார். அவர் பேசியதாவது:-
இந்திய கம்யூனிஸ்டு கட்சி என்பது சாதி, மதம், இனம் போன்றவற்றுக்கு அப்பாற்பட்ட கட்சி. தற்போது கம்யூனிஸ்டு கட்சியினர் சாதி, மதம், மொழி, இனம் போன்றவற்றில் பின்னப்பட்டு அவர்களுக்கு பின்னால் சென்று விடக்கூடாது. நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து அனைத்து வழிகளிலும் ஒற்றுமையுடன் வாழ வேண்டும். இந்தியா மதச்சார்பற்ற ஜனநாயக நாடு என்பது அனைவருக்கும் தெரியும். இதனை மறந்து மதம், சாதி என்ற பெயரில் மோடி ஆதிக்கம் செலுத்தி முதலாளித்துவ ஆட்சி நடத்தி வருகிறார். ஆகவே பா.ஜ.க.வுக்கு எதிராக அனைவரும் ஒன்று சேர்ந்து போராட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
Related Tags :
Next Story