சிவகங்கை முத்துப்பட்டியில் மத்திய அரசின் ‘ஸ்பைசஸ் பார்க்’கில் அனைத்து உட்கட்டமைப்பு வசதிகள் - கலெக்டர் தகவல்


சிவகங்கை முத்துப்பட்டியில் மத்திய அரசின் ‘ஸ்பைசஸ் பார்க்’கில் அனைத்து உட்கட்டமைப்பு வசதிகள் - கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 3 Sept 2019 4:00 AM IST (Updated: 2 Sept 2019 11:42 PM IST)
t-max-icont-min-icon

சிவகங்கை முத்துப்பட்டியில் மத்திய அரசின் ஸ்பைசஸ் பார்க்கில் அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளும் அமைத்து கொடுக்கப்படும் என்று கலெக்டர் தெரிவித்தார்.

சிவகங்கை,

சிவகங்கை முத்துப்பட்டியில் மத்திய அரசின் மூலம் உணவு பொருட்களை பதப்படுத்தி வைத்திருந்து ஏற்றுமதி செய்யும் வகையில் ஸ்பைசஸ் பார்க் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு தொழில் முனைவோருக்கான கலந்தாய்வு கூட்டம் கலெக்டர் ஜெயகாந்தன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது:- மாவட்டத்தில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் விதமாக மத்திய அரசு இதை தொடங்கி உள்ளது. இதன் நோக்கம் விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் தங்கள் உற்பத்தி பொருட்களை பதப்படுத்தி ஏற்றுமதி செய்வதற்காக அமைக்கப்பட்டதாகும்.

தற்போது இடத்திற்கான அனுமதி கடந்த மாதம் ஜூலை 19-ம் தேதி பெறப்பட்டது. அதையொட்டி தொழில் முனைவோர்களுக்கு, தொழிற்சாலை அமைப்பதற்கு கட்டிடம் கட்டுவதற்கான முறைகள், அரசின் திட்டங்கள் குறித்தும், வங்கிக்கடன் வழங்குவது குறித்தும் துறை அலுவலர்கள் மூலம் கருத்துரை வழங்கப்பட்டுள்ளது.

மேலும், தொழில் முனைவோர்கள் தொழில் தொடங்குவதற்கு ஏதுவாக, ஸ்பைசஸ் பார்க்கில் அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளும் அமைத்து கொடுக்கப்படும். அதுமட்டுமின்றி இங்கு பக்குவப்படுத்தப்படும் ஒவ்வொரு பொருட்களும் மதிப்பூட்டப்பட்ட பொருட்களாக இருப்பதால் வெளிச்சந்தையில் நல்ல வரவேற்பு கிடைக்கும். இந்த பகுதி இளைஞர்கள் வாழ்வாதாரத்தை உயர்த்திக் கொள்ள இந்த மையம் பயனுள்ளதாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் ஸ்பைசஸ் போர்டு இயக்குனர் சுரேஷ் குமார், துணை இயக்குனர் அஜய், மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் கணேசன், தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் ராஜேந்திரன், வேளாண் வணிக துணை இயக்குனர் வெங்கடேஷ்வரன், முன்னோடி வங்கி அலுவலர் பழனியப்பன் உள்பட தொழில் முனைவோர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து ஸ்பைசஸ் பார்க்கில் அமைந்துள்ள மஞ்சள் மற்றும் மிளகாய்ப் பொடி தயாரித்து உற்பத்தி செய்யும் கிடங்கை கலெக்டர் பார்வையிட்டார்.

Next Story