சுங்கான்கடை மலையில் நிலச்சரிவு, ராட்சத பாறை உருண்டு விழுந்தது - கிறிஸ்தவ ஆலயம் தப்பியது
சுங்கான்கடை மலையில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் ராட்சத பாறை உருண்டு விழுந்ததில் கிறிஸ்தவ ஆலயம் சேதமின்றி தப்பியது.
இரணியல்,
குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்தது. நேற்று முன்தினம் இரவும் பலத்த மழை பெய்தது. இரவு முழுவதும் மழை பெய்ததால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
சுங்கான்கடை மலைப்பகுதியிலும் பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக நேற்று அதிகாலையில் திடீரென மலைப்பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டது. மலையில் இருந்து ராட்சத பாறைகள் உருண்டு விழுந்தன. ஆனால், ஆலயத்துக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. நிலச்சரிவால் அப்பகுதியில் உள்ள ஒரு வீடு லேசாக சேதம் அடைந்தது.
தகவல் அறிந்த கிராம நிர்வாக அதிகாரி அம்புஜம் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். சேதமடைந்த வீடுகளையும் ஆய்வு செய்தனர். தொடர்ந்து மழை பெய்தால் அந்த பகுதியில் நிலச்சரிவு ஏற்பட வாய்ப்பு உள்ளதால், அங்குள்ள வீடுகளில் இருந்து பொதுமக்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டனர்.
மலைப்பகுதியில் இருந்து உருண்டு விழுந்த பாறைகள் பொக்லைன் எந்திரங்கள் மூலம் அகற்றப்பட்டன. சுங்கான்கடையில் நிலச்சரிவு ஏற்பட்டு பாறைகள் உருண்டு விழுந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story