கோத்தகிரி அருகே, ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்த கரடி கூண்டில் சிக்கியது
கோத்தகிரி அருகே ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்த கரடி வனத்துறையினர் வைத்த கூண்டில் சிக்கியது. அடர்ந்த வனப்பகுதிக்குள் கரடி விடப்பட்டது.
கோத்தகிரி,
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி எஸ்.கைகாட்டி அருகே சன்ஷைன் நகர் உள்ளது. இங்கு சுமார் 180-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு குட்டியுடன் வந்த கரடிகள் எஸ்.கைகாட்டி பகுதியில் பேக்கரியின் கதவை உடைத்து சேதப்படுத்தி தொடர்ந்து அட்டகாசம் செய்து வந்தன. இதையடுத்து வனத்துறையினர் கரடிகளை வனப்பகுதிக்குள் விரட்டினர்.
இதனையடுத்து கடந்த மார்ச் மாதம் கக்குளா கிராம மக்களுக்கு சொந்தமான மாரியம்மன் கோவிலுக்குள் புகுந்த கரடிகள் அங்கிருந்த பொருட்களை சேதப்படுத்தின. இதையடுத்து பொதுமக்களின் கோரிக்கையை தொடர்ந்து கரடியை பிடிக்க கூண்டு வைத்தனர். இதில் ஒரு கரடி மட்டும் சிக்கியது. அதனை வனத்துறையினர் அடர்ந்த வனப்பகுதிக்குள் விட்டனர்.
இந்த நிலையில் கடந்த மாதம் 22-ந் தேதி சன்ஷைன் நகா் பகுதிக்குள் புகுந்த கரடி, அங்குள்ள கோவிலின் கதவை உடைத்து சேதப்படுத்தியது. கரடியின் தொடர் அட்டகாசத்தால் அச்சமடைந்த கிராம மக்கள் கரடியை கூண்டு வைத்து பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். மேலும் நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டம் நடத்தபோவதாகவும் கிராம மக்கள் அறிவித்தனர்.
இதனை தொடர்ந்து கடந்த 4 நாட்களுக்கு முன்பு, வனத்துறையினர் சன்ஷைன் நகரில் கரடியை பிடிக்க கூண்டு வைத்தனர். கூண்டில்கரடிக்கு பிடித்தமான பழவகைகள் வைக்கப்பட்டு, தொடர்ந்து வனத்துறையினர் கண்காணித்து வைத்தனர். இந்த நிலையில் நேற்று அதிகாலை 4 மணியளவில் கூண்டிற்குள் கரடி சிக்கியது. கரடியின் சத்தத்தை கேட்டு அங்கு வந்த கிராமமக்கள் இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கோத்தகிரி வனச்சரகர் சீனிவாசன், வனவர் சக்திவேல், வனக்காப்பாளர்கள் முருகன், வீரமணி மற்றும் வேட்டைத்தடுப்பு காவலர்கள், பொதுமக்கள் உதவியுடன் கரடியை கூண்டோடு சரக்கு வாகனத்தில் ஏற்றி கோத்தகிரி லாங்வுட் சோலைக்கு கொண்டு சென்றனர். பிடிபட்ட கரடியை அப்பர்பவானி அடர்ந்த வனப்பகுதிக்குள் வனத்துறையினர் விட்டனர்.
இது குறித்து வனச்சரகர் சீனிவாசன் கூறுகையில்,கோத்தகிரி அருகே உள்ள எஸ்.கைகாட்டி பகுதியில் கடந்த மார்ச் மாதம் பிடிபட்ட கரடி பெண் கரடியாகும். தற்போது பிடிபட்டுள்ள கரடி ஆண் கரடியாகும். இந்த கரடி சன் ஷைன் நகரில் இருந்து மிளிதேன், மிஷன் காம்பவுண்ட் பகுதி உள்ளிட்ட பகுதிகளில் சுற்றி திரிந்து வந்த கரடியாகும். குடியிருப்பு பகுதிகளில் சுற்றி திரிந்து வந்த 2 கரடிகளும் பிடிபட்டுள்ளதால் பொதுமக்கள் இனி அச்சப்பட தேவையில்லை என்று தெரிவித்தார்.
Related Tags :
Next Story