பண்ருட்டி அருகே பரபரப்பு, ஊர்வலத்தில் கோஷ்டி மோதல்; விநாயகர் சிலை உடைப்பு - 3 பேர் காயம்


பண்ருட்டி அருகே பரபரப்பு, ஊர்வலத்தில் கோஷ்டி மோதல்; விநாயகர் சிலை உடைப்பு - 3 பேர் காயம்
x
தினத்தந்தி 2 Sep 2019 11:15 PM GMT (Updated: 2 Sep 2019 8:21 PM GMT)

பண்ருட்டி அருகே ஊர்வலத்தில் ஏற்பட்ட கோஷ்டி மோதலில் விநாயகர் சிலை உடைக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் 3 பேர் காயமடைந்தனர்.

பண்ருட்டி,

கடலூர் மாவட்டம் பண்ருட்டி பகுதியில் நேற்று விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது.

இதையொட்டி பண்ருட்டி அருகே கந்தன்பாளையத்தில் உள்ள மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர்களும், காமாட்சியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர்களும் தனித்தனியாக தங்கள் பகுதியில் விநாயகர் சிலையை வைத்து வழிபட்டனர்.

இதையொட்டி நேற்று மாலை காமாட்சியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர்கள், தாங்கள் வைத்திருந்த விநாயகர் சிலையை மேள, தாளம் முழங்க ஊர்வலமாக எடுத்து சென்றனர்.

அப்போது மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர்கள், அங்கு விநாயகர் சிலை ஊர்வலமாக கொண்டு வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து ஊர்வலத்தில் வந்தவர்கள், திடீரென மாரியம்மன் கோவில் தெருவில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலையை உடைத்து சேதப்படுத்தினர்.

மேலும் இருதரப்பினருக்கும் இடையே கோஷ்டி மோதல் ஏற்பட்டு ஒருவரையொருவர் தடியால் தாக்கிக்கொண்டனர். இதில் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த செந்தில்(வயது 40), சேதுபதி(30), வேலு ஆகிய 3 பேர் காயமடைந்தனர். இவர்கள் பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதற்கிடையே இதுபற்றி தகவல் அறிந்த பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகம் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

மேலும் இச்சம்பவம் தொடர்பாக இருதரப்பை சேர்ந்த 10 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் அங்கு அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்க போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

Next Story