உலக முதலீட்டாளர் மாநாடு குறித்து முதல்- அமைச்சர் வெள்ளை அறிக்கை வெளியிடவேண்டும் - கே.எஸ்.அழகிரி பேட்டி


உலக முதலீட்டாளர் மாநாடு குறித்து முதல்- அமைச்சர் வெள்ளை அறிக்கை வெளியிடவேண்டும் - கே.எஸ்.அழகிரி பேட்டி
x
தினத்தந்தி 3 Sept 2019 4:00 AM IST (Updated: 3 Sept 2019 1:53 AM IST)
t-max-icont-min-icon

உலக முதலீட்டாளர் மாநாட்டில் எவ்வளவு மூலதனம் வந்தது என முதல்- அமைச்சர் வெள்ளை அறிக்கை வெளியிடவேண்டும் என கே.எஸ்.அழகிரி கூறினார்.

மீன்சுருட்டி, 

அரியலூர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் கங்கைகொண்டசோழபுரத்தில் உள்ள கோழி கொண்டான் ஏரியை தூர் வாரும் பணியை தொடங்கி வைத்தல் மற்றும் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் 75-வது பிறந்த தினத்தை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி ஆகியவை நடத்தப்பட்டது. நிகழ்ச்சிக்கு அரியலூர் மாவட்ட தலைவர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். கட்சியின் மேலிடப்பார்வையாளர் ராதாகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். மாவட்ட பொருளாளர் மனோகரன், முன்னாள் இளைஞர் காங்கிரஸ் மாவட்ட தலைவர் சங்கர், வட்டார தலைவர் அறிவழகன், மாவட்ட துணை தலைவர் ராஜதுரை, மாவட்ட தலைவர் எஸ்.சி. பிரிவு ரத்தினம் உள்பட பலர் வாழ்த்திபேசினர். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ஏரியில் தூர்வாரும் பணியை தொடங்கி வைத்து, நலத்திட்ட உதவிகளை வழங்கினார். தொடர்ந்து அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழிசை சவுந்தரராஜன் தெலுங்கானாவில் ஆளுநராக பதவி ஏற்றது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. மோடி ஆட்சியில் பொருளாதாரம் அதல பாதாளத்திற்கு சென்றுள்ளது. பொருளாதாரத்தை சீர்படுத்த முடியாத அளவுக்கு சரிந்து உள்ளதாக வெளிநாடு மற்றும் உள்நாடு பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர். ஆட்டோமொபைல் தொழிலில் மட்டும் 3 லட்சம் பேர் வேலைவாய்ப்புகள் இல்லாமல் பலியாகியுள்ளனர். பிரபல பிஸ்கட் தயாரிப்பு நிறுவனத்தில் ஒரே நாளில் 10 ஆயிரம் பேர் வேலை இழந்துள்ளனர். ரிசர்வ் வங்கியின் உபரி நிதி பெற்று அன்றாட செலவுகளை செய்ய வேண்டிய நிலைக்கு மோடி அரசு தள்ளப்பட்டுள்ளது. இது ஒரு பொருளாதார சுனாமி ஆகும். இந்த சுனாமியிலிருந்து மோடி தப்பிக்க முடியாது. ரிசர்வ் வங்கியின் உபரி நிதி என்பது நாட்டில் பஞ்சம் வந்தாலோ, யுத்தம் வந்தாலோ தான் பயன்படுத்த வேண்டும். தற்போது உபரி நிதியை பயன்படுத்துவதால் நாட்டில் பஞ்சம் வந்துள்ளதா? அல்லது யுத்தம் வந்துள்ளதா? என்பதற்கு பா.ஜ.க. பதில் சொல்லியாக வேண்டும்.

பொருளாதார பிரச்சினைகளை மூடி மறைக்க சிதம்பரம் கைது, காஷ்மீர் பிரச்சினை ஆகியவற்றை கையில் எடுக்கின்றனர். அ.தி.மு.க. ஆட்சியில் ஏற்கனவே நடைபெற்ற உலக முதலீட்டாளர் மாநாட்டில் எவ்வளவு மூலதனம் வந்தது. அதில் எத்தனை தொழிற்சாலைகள் வந்தன. அந்த தொழிற்சாலைகள் தமிழ்நாட்டில் எங்கு உள்ளது. இதையெல்லாம் முதல்- அமைச்சர் வெள்ளை அறிக்கையாக விட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதில் கட்சி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக வட்டார தலைவர் செங்குட்டுவன் வரவேற்றார். முடிவில் நகர தலைவர் ஜாக்சன் நன்றி கூறினார்.

Next Story