கொடைக்கானலில், சுற்றுலாத்துறைக்கு 40 புதிய படகுகள் வாங்கப்படும் - கூடுதல் தலைமைச் செயலாளர் தகவல்
கொடைக்கானலில் சுற்றுலாத்துறைக்கு 40 புதிய படகுகள் வாங்கப்படும் என்று தமிழக அரசின் கூடுதல் தலைமைச்செயலாளர் அபூர்வவர்மா கூறினார்.
கொடைக்கானல்,
கொடைக்கானலில் உள்ள சுற்றுலாத்துறைக்கு சொந்தமான படகு குழாம்கள், நட்சத்திர ஏரி பகுதி, குறிஞ்சி ஆண்டவர் கோவில், அப்பகுதியில் உள்ள தொலைநோக்கி நிலையம் மற்றும் கோக்கர்ஸ்வாக் ஆகிய பகுதிகளை தமிழக அரசின் கூடுதல் தலைமைச்செயலாள அபூர்வவர்மா நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது நகராட்சி ஆணையாளர் முருகேசன், ஆர்.டி.ஓ. சுரேந்திரன், மண்டல சுற்றுலா அதிகாரி டேவிட் பிரபாகரன், சுற்றுலா அலுவலர் (பொறுப்பு) பாலமுருகன் உள்பட பல்வேறு துறைகளை சேர்ந்த அதிகாரிகள் உடன் இருந்தனர்.
பின்னர் கூடுதல் தலைமைச்செயலாளர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கொடைக்கானல் பகுதியில் உள்ள சுற்றுலாத்துறைக்கு சொந்தமான படகு குழாம்களுக்கு 40 புதிய படகுகள் வாங்க திட்டமிடப்பட்டுள்ளது. ரூ.28 லட்சம் செலவில் படகு குழாம்கள் புதுப்பிக்கப்பட்டு வருகிறது. அதேபோல அங்கு இ-டாய்லெட் வசதியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. படகு இயக்குபவர்கள் பாதுகாப்பு கவசம் அணிந்து படகுகளை இயக்க வேண்டும். அங்குள்ள பெயர் பலகைகளில் ஆங்கிலத்திற்கு பதிலாக, தமிழில் பெயர்களை பொருத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
நட்சத்திர ஏரியை அழகுப்படுத்துவது, தூர்வாருவது, ஏரியினை சுற்றியுள்ள நடைபாதைகளை சீரமைத்தல், கூடுதல் மின்விளக்குகள் அமைத்தல் போன்றவற்றினை மேற்கொள்வது குறித்து நகராட்சி ஆணையரிடம் விரிவான திட்ட அறிக்கை தயார் செய்ய கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
அதேபோல நகரில் உள்ள ஓட்டல்களின் எண்ணிக்கை, அதில் உள்ள அறைகள் குறித்த விவரங்கள் சுற்றுலாத்துறை அதிகாரிகளிடம் கேட்கப்பட்டுள்ளது. கிடைத்தவுடன் அரசுக்கு பரிந்துரை செய்து நகரில் போதிய அபிவிருத்தி பணிகள் மேற்கொள்ளப்படும். நட்சத்திர ஏரியை சுற்றி நிழற்குடைகள் அமைப்பது குறித்தும், மலைப்பகுதியில் கழிப்பறைகள் அமைப்பது குறித்தும் அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும். குறிஞ்சி ஆண்டவர் கோவில் பகுதியில் உள்ள தொலைநோக்கி நிலையத்தை சீரமைத்து சுற்றுலா பயணிகளின் பயன்பாட்டிற்கு கொண்டு வருவது குறித்தும் ஆலோசனை செய்து முடிவு எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story