உப்பிலியபுரம் அருகே, ஓடும் காரில் திடீர் ‘தீ’- பெண் உள்பட 2 பேர் உயிர் தப்பினர்
உப்பிலியபுரம் அருகே ஓடும் காரில் திடீரென தீப்பிடித்தது. இதில் பெண் உள்பட 2 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
உப்பிலியபுரம்,
திருச்சி துறையூரை சேர்ந்த கணேசனின் மனைவி கலைமணி (வயது 50). இவர் நாமக்கல்லில் உள்ள தனது மகளை பார்க்க காரில் செல்ல திட்டமிட்டார். இதற்காக சங்கம்பட்டியை சேர்ந்த தனது மருமகன் விஜியிடம் காரை வாங்கிக்கொண்டு நாமக்கல்லுக்கு நேற்று காலை புறப்பட்டார். காரை ஓட்ட வாடகை டிரைவர் ஒருவரை அவர் நியமித்து இருந்தார். கார் புறப்பட்டு காமாட்சிபுரம் அருகே வந்தபோது, ஓடும் காரின் முன் பகுதியில் கியாஸ் கசிவு காரணமாக திடீரென தீப்பிடித்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த டிரைவர் காரை சாலையோரம் நிறுத்திவிட்டு காரில் இருந்து இறங்கி தப்பி ஓடிவிட்டார். காரில் இருந்த கலைமணியும் காரில் இருந்து இறங்கி ஓடி சற்று தொலைவில் சென்று நின்றுகொண்டார்.
பின்னர் இதுபற்றி துறையூர் தீயணைப்பு நிலையத்துக்கும், போலீசாருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. உடனே தீயணைப்பு நிலைய அதிகாரி பாலசந்தர் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். ஆனாலும் கார் முற்றிலும் தீயில் எரிந்து நாசமானது. அதேநேரம், கலைமணியும், டிரைவரும் காரில் இருந்து இறங்கி சென்றதால் அவர்கள் எவ்வித காயமும் இன்றி உயிர் தப்பினார்கள். இந்த சம்பவம் குறித்து துறையூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் குருநாதன் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் இந்த தீ விபத்து காரணமாக அந்த சாலையில் சுமார் ஒரு மணிநேரம் போக்குவரத்து தடைபட்டது.
Related Tags :
Next Story