சினிமா தியேட்டர்களில் ஆன்லைன் மூலம் டிக்கெட் விற்பனை செய்ய பரிசீலனை - அமைச்சர் கடம்பூர் ராஜூ தகவல்


சினிமா தியேட்டர்களில் ஆன்லைன் மூலம் டிக்கெட் விற்பனை செய்ய பரிசீலனை - அமைச்சர் கடம்பூர் ராஜூ தகவல்
x
தினத்தந்தி 2 Sep 2019 10:45 PM GMT (Updated: 2 Sep 2019 8:25 PM GMT)

சினிமா தியேட்டர்களில் ஆன்லைன் மூலம் மட்டுமே டிக்கெட் விற்பனை செய்ய பரிசீலனை செய்யப்பட்டு வருவதாக அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறினார்.

கோவில்பட்டி, 

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, அவர் கூறியதாவது:-

சமத்துவ நல்லிணக்கத்துடன் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்து வழிபட்டு, கடலில் விஜர்சனம் செய்வதற்கு தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளை அரசு செய்துள்ளது. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளிப்படையாக திட்டமிட்டு, தமிழகத்தில் தொழில் முதலீடுகளை உருவாக்குவதற்காக வெளிநாடு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். தமிழகத்தில் வெளிநாடுகளுக்கு இணையான தரமான மருத்துவ சேவை, ஏர் ஆம்புலன்ஸ் வசதி கிடைக்க புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளார்.

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பலமுறை வெளிநாடுகளுக்கு சென்றாலும்கூட, ஒரு முறையேனும் அங்கு என்ன செய்தார்? என்பது குறித்து ஊடகங்களிடம் சொல்வது கிடையாது. எதிர்க்கட்சி தலைவரும் அரசின் ஒரு அங்கம்தான். அவரிடம் கேள்வி கேட்கும் உரிமை எங்களுக்கு உள்ளது. ஆனாலும் நாகரிகம் கருதி அவரது வெளிநாடு சுற்றுப்பயணம் குறித்து நாங்கள் கேள்வி கேட்கவில்லை. எதை எடுத்தாலும் அரசியலாக்கும் மு.க.ஸ்டாலினின் முகத்திரை கிழிக்கப்பட்டு இருக்கிறது.

மொரீஷியஸ் நாட்டின் ஜனாதிபதியாக பரமசிவம்பிள்ளை வையாபுரி என்ற தமிழர் உள்ளார். அவரது குடும்பம் 7 தலைமுறையாக அந்த நாட்டில் உள்ளது. அவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அந்த நாட்டின் துணை ஜனாதிபதியாக பதவி வகித்த நிலையில் சென்னைக்கு வந்தபோது எனது மகளின் திருமண விழாவில் பங்கேற்றார். எனவே அவரது அழைப்பை ஏற்று, அவரது இல்ல திருமண விழாவில் பங்கேற்பதற்காக, முதல்-அமைச்சரிடம் அனுமதி பெற்று, தனிப்பட்ட முறையில் மொரீஷியஸ் நாட்டுக்கு சென்று வந்தேன்.

அப்போது அந்த நாட்டில் உள்ள தமிழ் ஐக்கிய சங்கத்தில் நிறுவுவதற்காக, எம்.ஜி.ஆர். பல்கலைக்கழக வேந்தர் ஏ.சி.சண்முகம் அன்பளிப்பாக வழங்கிய எம்.ஜி.ஆரின் சிலையை கொண்டு சென்று வழங்கினேன். அங்கு எம்.ஜி.ஆருக்கு சிலை அமைத்ததை மு.க.ஸ்டாலின் கொச்சைப்படுத்துகிறாரா?

அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்து சென்றவர்கள் நிலைத்ததாக வரலாறு இல்லை. தேர்தலில் டி.டி.வி.தினகரனின் கட்சிக்கு 0.5 சதவீத வாக்குகளே கிடைத்தது. அவரது கட்சியை ஒரு பொருட்டாகவே கருதவில்லை.

சினிமா தியேட்டர்களில் விதிமுறைகள் வகுக்கப்பட்டு, கட்டணம் ஒழுங்குப்படுத்தப்பட்டு உள்ளது. அங்கு பார்க்கிங் மற்றும் தின்பண்டம் போன்றவற்றுக்கு தரக்கட்டுப்பாடு தீவிரமாக பரிசீலிக்கப்படுகிறது. தமிழகம் முழுவதும் தியேட்டர்களில் ஒரு நாளில் எத்தனை காட்சிகளில் எத்தனை டிக்கெட்டுகள் விற்கப்பட்டு உள்ளன? என்பதை வெளிப்படையாக ஆன்லைன் மூலமாக கண்காணிக்கும் வகையில், சோதனை முறையில் பரிசோதித்து பார்க்கப்பட்டு உள்ளது. இது விரைவில் நடைமுறைக்கு வரும். தியேட்டர்களில் ஆன்லைன் மூலம் மட்டுமே டிக்கெட் விற்பனை செய்ய பரிசீலிக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story