ஜம்மு காஷ்மீரில் உயிரிழந்த ராணுவ வீரரின் உடல் சொந்த ஊரில் அடக்கம்


ஜம்மு காஷ்மீரில் உயிரிழந்த ராணுவ வீரரின் உடல் சொந்த ஊரில் அடக்கம்
x
தினத்தந்தி 3 Sept 2019 4:00 AM IST (Updated: 3 Sept 2019 1:56 AM IST)
t-max-icont-min-icon

ஜம்மு காஷ்மீரில் உயிரிழந்த ராணுவ வீரரின் உடல் சொந்த ஊரில் அடக்கம் செய்யப்பட்டது.

ஜெயங்கொண்டம்,

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அண்ணாநகரை சேர்ந்தவர் ரத்தினம். இவர் ஜெயங்கொண்டம் நகராட்சியில் துப்புரவு பணியாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவருக்கு 2 மகன்கள் மற்றும் 4 மகள்கள் உள்ளனர். இவரது இளைய மகன் வீரமணி(வயது 32) கடந்த 10 ஆண்டுகளாக இந்திய ராணுவத்தில் பணியாற்றி வந்தார். இவருக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. குழந்தைகள் இல்லை. இவரது மனைவி ரீனாதேவி சென்னை ஆவடியில் உள்ள துப்பாக்கி தொழிற்சாலையில் பணியாற்றி வருகிறார்.

இந்த நிலையில் டெல்லி தலைமையிடத்து ராணுவத்தில் பணியாற்றிய வீரமணி சமீபத்தில் ஜம்முகாஷ்மீர் மாநிலம் பிரிக்கப்பட்டபோது பாதுகாப்பு பணிக்காக ஜம்முகாஷ்மீரில் இடம் மாற்றம் செய்து அனுப்பப்பட்டார். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ராணுவ வீரர்கள் சிலர் காணாமல் போனதாக அறிவிக்கப்பட்டு அவர்களை தேடும் பணியில் ராணுவத்தினர் ஈடுபட்டிருந்தனர். இந்த நிலையில் வீரமணி உயிரிழந்த நிலையில் அவரது உடல் மீட்கப்பட்டு டெல்லி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டது.

இதையடுத்து அவரது உடலை அடையாளம் காணும் வகையில் அவரது உறவினர்கள் கடந்த 3 நாட்களுக்கு முன்பு டில்லிக்கு சென்று இறந்தவர் வீரமணி தான் என்பதை உறுதி செய்தனர். இதையடுத்து வீரமணியின் உடல் ஜெயங்கொண்டத்திற்கு நேற்று அதிகாலை கொண்டுவரப்பட்டது. பின்னர் இறுதி சடங்கு நடைபெற்றது. அதனை தொடர்ந்து வீரமணிக்கு சொந்தமான இடத்தில் அடக்கம் செய்யப்பட்டது. இதில் அ.தி.மு.க. அரியலூர் மாவட்ட செயலாளரும், அரசு தலைமை கொறடாவுமான தாமரை ராஜேந்திரன், ராமஜெயலிங்கம் எம்.எல்.ஏ., தி.மு.க. மாவட்ட செயலாளர் எஸ்.எஸ்.சிவசங்கர், அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன், துணை போலீஸ் சூப்பிரண்டு பெரியய்யா, ஜெயங்கொண்டம் போலீஸ் துணை சூப்பிரண்டு மோகன்தாஸ், உடையார்பாளையம் வருவாய் கோட்டாட்சியர் பூங்கோதை, ஜெயங்கொண்டம் தாசில்தார் கலைவாணன், மற்றும் அரசு துறையை சேர்ந்த அதிகாரிகள், பல்வேறு அமைப்பைச் சேர்ந்தவர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள் பலர் கலந்துகொண்டு மறைந்த ராணுவ வீரர் வீரமணியின் உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். பின்னர் அவரது பெற்றோர், மனைவி மற்றும் சகோதர, சகோதரிகளுக்கு ஆறுதல் கூறினர். இச்சம்பவத்தால் அப்பகுதி முழுவதும் சோகத்தில் ஆழ்ந்தது.

Next Story