மாட்டுவண்டியில் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்ட விநாயகருக்கு மாலை அணிவிக்க முயன்ற மாணவன் சாவு
மாட்டுவண்டியில் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்ட விநாயகர் சிலைக்கு மாலை அணிவிக்க முயன்ற மாணவன் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தான்.
அரக்கோணம்,
வேலூர் மாவட்டம் அரக்கோணம் அருகே உள்ள மோசூர் கிராமம், பள்ளிக்கூடத்தெருவில் உள்ள வரசித்தி விநாயகர் கோவில் அருகே கடந்த சனிக்கிழமை அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் விநாயகர் சிலை வைத்து பூஜை செய்து வழிபட்டனர். நேற்று முன்தினம் இரவு விநாயகர் சிலைக்கு மின்விளக்குகளால் அலங்காரம், சிறப்பு பூஜை செய்து மாட்டு வண்டியில் வைத்து கிராமத்தில் முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக கொண்டு சென்றனர்.
மாட்டு வண்டியில் விநாயகர் சிலைக்கு ஜெனரேட்டர் மூலம் மின்விளக்கு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. விநாயகருக்கு பொதுமக்கள் தேங்காய் உடைத்து கற்பூரம் ஏற்றி வழிபட்டனர். ஊர்வலத்தில் மோசூர், பவுண்டு தெருவை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவரின் மகன் சிவராமன் (வயது 17) கலந்து கொண்டான். சிவராமன் அரக்கோணத்தில் உள்ள தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தான்.
நேற்று அதிகாலையில் ஊர்வலம் மோசூர் பச்சையம்மன் கோவில் தெரு அருகே சென்று கொண்டு இருந்த போது சிவராமன் விநாயகர் சிலையை சுத்தம் செய்து விட்டு மாலை அணிவிக்க முயன்றான். அப்போது அலங்கார மின்விளக்கு வயரில் இருந்து கசிந்த மின்சாரம் அவன் மீது பாய்ந்தது.
இதில் தூக்கி வீசப்பட்ட சிவராமனை அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே சிவராமன் பரிதாபமாக உயிரிழந்தான். இதுகுறித்து தகவல் அறிந்ததும் அரக்கோணம் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துராமலிங்கம், சப்-இன்ஸ்பெக்டர் மஞ்சுநாத் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று, உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story