விநாயகர் சிலைகளை கரைக்க 200 லாரி தண்ணீர் ஊற்றி குட்டை நிரப்பப்படுகிறது


விநாயகர் சிலைகளை கரைக்க 200 லாரி தண்ணீர் ஊற்றி குட்டை நிரப்பப்படுகிறது
x
தினத்தந்தி 3 Sept 2019 4:00 AM IST (Updated: 3 Sept 2019 1:58 AM IST)
t-max-icont-min-icon

கோவை அருகே விநாயகர் சிலைகளை கரைக்க 200 லாரி தண்ணீர் ஊற்றி குட்டை நிரப்பப்பட்டு வருகிறது.

துடியலூர்,

விநாயகர் சதுர்த்தியையொட்டி கோவை மாநகர் மற்றும் புறநகரில் 1800 விநாயகர் சிலைகள் அமைக்கப்படுகின்றன. இந்த சிலைகள் நாளை (புதன்கிழமை ) மற்றும் 6-ந் தேதிகளில் கோவை மற்றும் புறநகரில் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு குளங்களில் கரைக்கப்படுகின்றன.

கோவை மாநகரில் செல்வசிந்தாமணி குளம், குறிச்சி குளம் மற்றும் புறநகரில் பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம் ஆகிய பகுதிகளில் உள்ள குளங்களில் விநாயகர் சிலைகளை கரைப்பதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

கோவை துடியலூர், பெரியநாயக்கன்பாளையம், தடாகம், சரவணம்பட்டி ஆகிய இடங்களில் அமைக்கப்படும் விநாயகர் சிலைகள் கோவையை அடுத்த வெள்ளக்கிணறில் உள்ள குட்டையில் ஒவ்வொரு ஆண்டும் கரைக்கப்படும். ஆனால் அந்த குட்டை தற்போது தண்ணீர் இன்றி வறண்டு கிடந்தது. மேலும் போதிய மழை பெய்யாததால் அந்த குட்டைக்கு தண்ணீர் வரத்து குறைவாக உள்ளது. இதனால் அங்கு விநாயகர் சிலைகளை கரைக்க முடியாத நிலை ஏற்பட்டது.

இதைத் தொடர்ந்து சுமார் ஒரு ஏக்கர் பரப்பளவு உள்ள அந்த குட்டையை லாரி தண்ணீர் ஊற்றி நிரப்பும் பணி கடந்த 2 நாட்களாக நடைபெற்று வருகிறது. இதற்காக கோவை மாநகராட்சி சார்பில் வெள்ளகிணறு, துடியலூர், உடையாம்பாளையம் ஆகிய பகுதிகளில் இருந்து லாரிகளில் தண்ணீர் கொண்டு வந்து குட்டையில் ஊற்றப்படுகிறது. அந்த குட்டையில் மொத்தம் 200 லாரி தண்ணீர் ஊற்றப்படும் என்று தெரிகிறது.இது குறித்து கோவை மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

ஒவ்வொரு ஆண்டும் வெள்ளக்கிணறு குட்டையில் தான் விநாயகர் சிலைகள் கரைக்கப்படும். ஆனால் இந்த ஆண்டு போதிய மழை இல்லாததால் லாரிகள் மூலம் தண்ணீர் நிரப்பும் பணிகள் நடைபெற்று வருகின்றன.நாளை (புதன்கிழமை) இந்த பகுதியில் வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகள் ஊர்வலமாக கொண்டு வந்து குட்டையில் கரைக்கப்படும்.

குட்டையில் எவ்வளவு தண்ணீர் நிரப்பப்பட முடியுமோ அந்த அளவிற்கு தண்ணீர் ஊற்றி நிரப்பப்பட்டுள்ளது. ஒரு வேளை சிலைகளை கரைக்கும் போது தண்ணீர் குறைந்தால் உடனடியாக தண்ணீர் நிரப்பவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் குட்டையை சுற்றி தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story