கிருஷ்ணகிரி அருகே, விஷம் குடித்த கள்ளக்காதலி சாவு - காதலனுக்கு தீவிர சிகிச்சை
கிருஷ்ணகிரி அருகே விஷம் குடித்த கள்ளக்காதலி உயிரிழந்தார். அவரது காதலனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
குருபரப்பள்ளி,
கர்நாடக மாநிலம் மைசூரை அடுத்த கோப்புலு கிராமத்தை சேர்ந்தவர் சுவாமி. இவரது மனைவி பிந்து (வயது 20). இவர்களுக்கு 2 வயதில் பெண் குழந்தை ஒன்று உள்ளது. இந்த நிலையில் பிந்துவிற்கும், அதே பகுதியை சேர்ந்த மல்லிகார்ஜூன்(28) என்பவருக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. இது குறித்து அறிந்த பிந்துவின் வீட்டார் அவரை கண்டித்துள்ளனர். இதனால் மனமுடைந்த இருவரும் வீட்டை விட்டு வெளியேறி திருவண்ணாமலைக்கு செல்வதற்காக பஸ்சில் வந்தனர்.
அந்த பஸ் கிருஷ்ணகிரி - ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் சிக்காரிமேடு என்ற இடத்தில் உள்ள ஒரு ஓட்டலில் பயணிகள் சாப்பிடுவதற்காக நிறுத்தப்பட்டது. அப்போது 2 பேரும் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து, தாங்கள் வாங்கி வந்திருந்த விஷத்தை இருவரும் குடித்து மயங்கி விழுந்தனர். இதைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் இருவரையும் மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி பிந்து உயிரிழந்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த மல்லிகார்ஜூன் தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து குருபரப்பள்ளி கிராம நிர்வாக அலுவலர் அர்ச்சுனன் கொடுத்த புகாரின் பேரில் குருபரப்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story