சேலம் அருகே, கார் மோதி டிரைவர் சாவு - கலெக்டர் அலுவலகம் முன்பு உறவினர்கள் சாலை மறியல்
சேலம் அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் சரக்கு ஆட்டோ டிரைவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் கலெக்டர் அலுவலகம் முன்பு உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சேலம்,
சேலம் சிவதாபுரம் அருகே உள்ள திருமலைகிரி பகுதியை சேர்ந்தவர் ரகுபதி (வயது 27). சரக்கு ஆட்டோ டிரைவர். இவருடைய மனைவி சுகுணா. இந்த தம்பதிக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். மூன்றாவதாக கர்ப்பம் தரித்த சுகுணா, தற்போது நிறைமாத கர்ப்பிணியாக உள்ளார். இதனிடையே கந்தம்பட்டி பைபாசில் உள்ள ஒரு நிறுவனத்திற்காக ரகுபதி ஆட்டோ ஓட்டியுள்ளார். இதற்கான வாடகை தொகை பெறுவதற்காக கடந்த 31-ந் தேதி மதியம் கந்தம்பட்டி பைபாசில் ரகுபதி மோட்டார் சைக்கிளில் சென்றார். அங்கு அவர் வாடகை பணத்தை பெற்றுக்கொண்டு வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டிருந்தார்.
சிவதாபுரம் கந்தசாமி கவுண்டர் திருமண மண்டபம் அருகே வந்தபோது எதிரே வந்த கார், ரகுபதி ஓட்டிச்சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது. இதில் தூக்கி வீசப்பட்டதில் அவர் படுகாயமடைந்தார். இதையடுத்து அக்கம்பக்கத்தினர் ரகுபதியை மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இது தொடர்பாக கொண்டலாம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் நேற்று ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி ரகுபதி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த ரகுபதி குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் 100-க்கும் மேற்பட்டோர் ஆஸ்பத்திரிக்கு திரண்டு வந்தனர். ரகுபதி உடலை பார்த்து அவரது நிறைமாத கர்ப்பிணி மனைவி சுகுணா கதறி அழுதார். இது அங்கிருந்தவர்கள் இடையே சோகத்தை ஏற்படுத்தியது.
ஆத்திரமடைந்த ரகுபதி உறவினர்கள் திடீரென கலெக்டர் அலுவலகம் முன்பு திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள் சாலையில் அமர்ந்து விபத்தை ஏற்படுத்திய நபர் மீது நடவடிக்கை எடுக்கவும், அதுவரை ரகுபதி உடலை வாங்க மாட்டோம் என்று கூறியும், மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையறிந்த உதவி போலீஸ் கமிஷனர் ஈஸ்வரன், டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் குமரேசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
இதைத்தொடர்ந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள் கூறுகையில், ரகுபதி மீது சம்பவத்தன்று ஒரு கார் மோதிவிட்டு நிற்காமல் சேலம் நோக்கி சென்றுவிட்டது. விபத்து நடந்து 2 நாட்களாகியும் சம்பந்தப்பட்ட கார் குறித்தோ, அதை ஓட்டிச்சென்ற டிரைவரை கண்டுபிடிக்க இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மேலும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் விபத்து நடைபெற்ற காட்சி பதிவாகி உள்ளது. ஆனால் அந்த பதிவில் விபத்து நடப்பது, ரகுபதி தூக்கி வீசப்படுவது மட்டுமே பதிவாகி உள்ளதாகவும், கார் நம்பர் எதுவும் பதிவாகவில்லை எனவும் போலீசார் தெரிவிக்கின்றனர்.
விபத்தில் தொடர்புடையவர்களை கண்டுபிடிப்பதில் போலீசார் மெத்தனமாக செயல்படுகின்றனர். எனவே விபத்தை ஏற்படுத்திய கார் டிரைவரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று கூறினர். இதைக்கேட்ட போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அவர்களிடம் உறுதியளித்தனர். இதில் சமாதானம் அடைந்த அவர்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் கலெக்டர் அலுவலகம் முன்பு பரபரப்பு ஏற்பட்டது.
இதனிடையே போலீசார் சமாதானத்திற்கு பின்பு ஆஸ்பத்திரியில் ரகுபதி உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர் அவருடைய உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
Related Tags :
Next Story