பெண்களிடம் நகை பறித்த 3 கொள்ளையர்கள் கைது
சேலம் மாவட்டத்தில் பெண்களிடம் நகை பறித்த 3 கொள்ளையர்களை போலீசார் கைது செய்தனர்.
இளம்பிள்ளை,
சேலம் மாவட்டம் எடப்பாடி கவுண்டம்பட்டி செல்லியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் உண்ணாமலை அம்மாள் (வயது 65). இவர் கடந்த ஜூலை மாதம் 13-ந்தேதி நடைபயிற்சி சென்றபோது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் நகையை பறித்து சென்றனர். இதுகுறித்த புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் செந்தில், சசிகுமார் ஆகியோர் தலைமையிலான தனிப்படை போலீசார் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டு வந்தனர்.
இந்தநிலையில் எடப்பாடியில் சங்ககிரி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பாலத்தின் மீது ஒரு மோட்டார் சைக்கிள் மோதி கால் முறிவு ஏற்பட்டது. அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக எடப்பாடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் தனிப்படை போலீசார் ஆஸ்பத்திரிக்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் சென்னை திரு.வி.க. நகரை சேர்ந்த கார்த்திக்(32), இளம்பிள்ளை அருகே உள்ள தப்பக்குட்டையை சேர்ந்த மாரிமுத்து(39) என்பதும் தெரியவந்தது.
இவர்கள் 2 பேரும், சென்னையை சேர்ந்த சரவணன்(32) என்பவருடன் சேர்ந்து சேலம் மாவட்டத்தில் தாரமங்கலம், எடப்பாடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வழிப்பறி, பெண்களிடம் நகை பறிப்பு உள்ளிட்ட சம்பவங்களில் ஈடுபட்டதும் தெரியவந்தது. மேலும் கொள்ளையர்களான இவர்கள் 3 பேரும் சேர்ந்து உண்ணாமலை அம்மாள், இளம்பிள்ளையை சேர்ந்த கனகா, தாரமங்கலத்தை சேர்ந்த ருக்குமணி ஆகியோரிடம் நகையை பறித்து சென்றது தெரிய வந்தது.
இதையடுத்து சேலம் மாவட்டத்தில் தொடர் வழிப்பறி, நகை பறிப்பு உள்ளிட்ட சம்பவங்களில் ஈடுபட்ட கொள்ளையர்கள் கார்த்திக், மாரிமுத்து, சரவணன் ஆகிய 3 பேரையும் மகுடஞ்சாவடி போலீஸ் இன்ஸ்பெக்டர் சசிகுமார் கைது செய்தார்.
Related Tags :
Next Story